Published : 07 Nov 2022 05:54 PM
Last Updated : 07 Nov 2022 05:54 PM
மதுரை: மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை பணியின்போது 12 அடி பள்ளத்தில் மண் சரிந்து தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒப்பந்ததாரர்கள் அலட்சியத்தால் ஒரே ஆண்டில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.
மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய 12 அடி பள்ளத்தில் தொழிலாளி மண் சரிந்து புதைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மாநகராட்சி ஒப்பந்ததாரர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாததால் இந்த விபத்து நடந்தள்ளது. மதுரை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளில் பாதாள சாக்கடை வசதியில்லை. அதனால், இந்த வார்டுகளில் ரூ.500 கோடிக்கு நிதி ஒதுக்கி புதிதாக பாதாள சாக்கடை அமைக்க பணிகள் நடக்கிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்வதால் பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்களிலும், தோண்டி முறையாக மூடாத இடங்களிலும் மழைநீர் தேங்கி சாலைகள் முழுவதும் சேதமடைந்துள்ளது. சாலை எது, பள்ளம் எது என தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் தடுமாறி விழுந்து தினமும் படுகாயம் அடைகின்றனர். இந்நிலையில், மதுரை மாநகராட்சி 2வது வார்டு அசோக்நகர் 2வது தெரு பகுதியில் இன்று காலை பாதாளசாக்கடை தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதில், பாதாளசாக்கடை தொட்டி அமைப்பதற்காக சுமார் 12 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த கொத்துக்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (36) என்ற தொழிலாளி, பாதுகாப்பு இல்லாமல் 13 அடி பள்ளத்தில் இறங்கி வேலை பார்த்துள்ளார். ஏற்கெனவே இதேபகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டியுள்ளனர். அதனால், இந்த இடம் சரியாக மண் பிடிமானம் இல்லாமல் ஆங்காங்கே வெடித்து நின்றுள்ளது.
இவர் உள்ளே ட்ரில் மிஷினை கொண்டு தொட்டி அமைக்கும் பணியில் ஓட்டை போடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுற்றிலும் அதிர்வு ஏற்பட்டு ஏற்கெனவே பிடிமானம் இல்லாமல் இருந்த மண் சக்திவேல் மீது சரிந்து விழுந்துள்ளது. உடன் பணிபுரிந்த தொழிலார்களால் மண்ணில் புதைந்த தொழிலாளியை மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு காலை 11.30 மணி முதல் மீட்பு பணி நடந்தது. மதியம் 3.30 மணி நேரப்போராட்டத்திற்கு பிறகு தொழிலாளியை இறந்த நிலையில் மீட்டனர். உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எம்.பி. சு.வெங்கடேசன், மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், காவல்துறை துணை ஆணையர் மோகன்ராஜ், துணை மேயர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியை பார்வையிட்டனர்.
இறந்த தொழிலாளி சக்திவேலுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விளாங்குடி பகுதியில் இதேபோன்று மண் சரிந்து தொழிலாளி ஒருவர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், குடிநீர் பணிக்காக தோண்டிய குழியில் ஒருவர் விழுந்து உயிரிழந்தார். அதற்கு முன் பழங்காநத்ததில் கழிவு நீர் சுத்திகரிப்பு பணியில் 3 தொழிலாளர்கள் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர். ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் கடந்த ஒரு ஆண்டில் 6 தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர். பாதாள சாக்கடைப் பணிகள், பெரியாறு கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மேற்பார்வையில்லாமல் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் நடக்கிறது. அதனாலே, இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது.
முதல்வரை சந்தித்து மேயர் மீது புகார் செய்வேன்: 2வது வார்டில் திமுக மாமன்ற உறுப்பினர் அமுதா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஏற்கெனவே எங்கள் வார்டில் இதுபோல் மண் சரிந்து ஒரு தொழிலாளி இறந்துள்ளார். அதனால், சாலையில் உள்ள பள்ளங்களால் மக்கள் வழுக்கி விழுகிறார்கள். விபத்துகள் நடக்கிறது. பொதுமக்கள் போக்குவரத்துதிற்கு இடையூறாக உள்ளது. அதனால், பைப் லைன் போடுவது, பாதாள சாக்கடைக்கு குழிக்கு பள்ளம் தோண்டுவது, மழைகாலம் முடியும் வரை நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சியில் கூறியிருந்தேன்.
ஆனால், என் பேச்சை கேட்காமல் மேயர் இந்த பணியை மேற்கொண்டார். அவர் ஏற்கெனவே மாநகராட்சிக் கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசியதால் பேசுவது கிடையாது. எனது வார்டை புறக்கணித்து வந்தார். மக்களுக்கான அடிப்படை வசதிகளை கூட செய்து தருவதில்லை. தற்போது என் பேச்சை மீது பள்ளம் தோண்டியதால் மீண்டும் விபத்து நடந்துள்ளது. அதனால், மேயர் குறித்து முதல்வரை சந்தித்து புகார் அளிக்க உள்ளேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT