Published : 07 Nov 2022 04:40 PM
Last Updated : 07 Nov 2022 04:40 PM
புதுச்சேரி: “புதுச்சேரியில் பள்ளிகளில் ஐந்து மாதங்களாக முட்டை விநியோகத்தை நிறுத்தியுள்ளனர். தரமான மதிய உணவை குழந்தைகளுக்கு வழங்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். காலை உணவையும் குழந்தைகளுக்கு தமிழகம்போல் தர வேண்டும்” என்று அம்மாநில திமுக வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் உள்ள சுல்தான்பேட்டை தொடக்கப் பள்ளி, உத்திரவாணி பேட் மற்றும் பெரிய பேட் தொடக்கப் பள்ளிகளுக்கு கணினி, பிரின்டர் உட்பட கல்விக்கு தேவையான சாதனங்கள் வழங்கும் நிகழ்வு தனியார் அமைப்பு மூலம் இன்று நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசியது: ''அட்சய பாத்திரா மூலம் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் சாதம், அவர்களின் தொண்டையில் இறங்காத வகையில் பெரிது, பெரிதாக உள்ளது. மேலும் உணவில் ருசியும் இல்லை. இதை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கட்சி உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
இன்று வழங்கப்பட்ட உணவை வெஜிடெபிள் பிரியாணி என்கின்றனர். ஆனால் அது என்ன உணவு என்றே தெரியாதது போல் உள்ளது. கடந்த 5 மாதங்களாக குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கான முட்டையை யார் சாப்பிடுகின்றார்கள் என்றும் தெரியவில்லை. உடனடியாக மாணவர் உணவுப் பிரச்சினையை கல்வித் துறை சரி செய்ய வேண்டும். ஒரு கால கட்டம் வரை பொறுப்போம். சரி செய்ய வில்லையென்றால், தரமின்றி வழங்கப்படும் மாணவர்களுக்கான மதிய உணவுப் பிரச்சினையை பெரிய அளவில் கொண்டு சென்று போராடுவோம்.
தமிழகத்தில் மதிய உணவைத் தாண்டி, காலை உணவும் தருகின்றனர். மூளை வளர்ச்சி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என்று மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தொடங்கி செயல்படுத்தி வருகிறார். அதுபோன்ற நிலை புதுச்சேரியிலும் வர வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT