Published : 07 Nov 2022 01:43 PM
Last Updated : 07 Nov 2022 01:43 PM

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு | “சமூக நீதி தத்துவத்திற்கு நேர் முரணானது” - கி.வீரமணி

கி.வீரமணி | கோப்புப்படம்

சென்னை:"உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான சமூக நீதித் தத்துவத்திற்கு நேர் முரணானது" என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்று இன்று (நவ.7) ஓய்வுபெறும் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் உள்ள அரசியல் அமர்வு அளித்துள்ள - 103ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என்ற பெரும்பான்மைத் தீர்ப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான சமூக நீதித் தத்துவத்திற்கு நேர் முரணானது.

இந்தப் பொருளாதார அடிப்படையில் அது செல்லாது என்ற மண்டல் குழு தொடர்பான 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலிருந்து தப்பிக்கவே, 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமே - அடிக்கட்டுமானத்திற்கு விரோதமானதாகும் என்பதால், இது ஒடுக்கப்பட்ட பசியேப்பக்காரனை வெளியே தள்ளி, புளியேப்பக்காரனான முன்னேறிய சாதி ஏழைகளை உள்ளே விருந்துக்கு அனுப்பும் சமூக அநீதியாகும். இதனை நியாயப்படுத்திட எந்தப் புள்ளி விவரமும், ஆதாரமும் கிடையாது. இதன்மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டியது அவசியம், அவசரம்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. ஆயினும், இந்த வழக்கில் 5-ல் இரு நீதிபதிகள் செல்லாது என மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 5-ல் 3 பேர் செல்லும் எனக் கூறியதால் சட்டம் செல்லத்தக்காகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x