Published : 07 Nov 2022 01:00 PM
Last Updated : 07 Nov 2022 01:00 PM
சென்னை: தமிழகத்தில் 808 கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற முறைகேடுகளில் ரூ.365 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவுச் சங்கங்களை கணினிமயமாக்கும் நடவடிக்கை மற்றும் முறைகேடு தொடர்பாக கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியிலும், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் மைய வங்கியியல் தீர்வுமுறை நடைமுறையில் உள்ளது. இந்த வங்கிகளில் மொபைல் பேங்கிங், ஆர்டிஜிஎஸ், நிப்ட் போன்ற வசதிகள் நடைமுறையில் உள்ளன.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் யூபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, கூகுல் பே, பேடிஎம் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒருமாத காலத்தில் இந்த யூபிஐ வசதி அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். நகர கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும் மைய வங்கியியல் தீர்வுமுறை பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன. பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, ஓரிரு மாதங்களில் நிறைவு பெற உள்ளன.
மாநிலம் முழுவதிலும் உள்ள 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களையும், 25 பெரும்பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களையும் கணினிமயப்படுத்துவதற்கு நபார்டு வங்கி மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கணினிமயமாக்கல் பணிகளால் கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.
808 க்கும் மேற்பட்ட சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு, அதன் தொடர்ச்சியாக ரூ.365 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு, அவற்றை ஏலம்விடுவதற்கான நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொடர்புடைய சங்கங்கள் அனைத்திலும் உள்ள நிர்வாகக்குழு கலைக்கப்பட்டும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டும், தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளும் முடவடைந்துள்ளன.
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு பொதுவான ஒரு மொபைல்செயலி உருவாக்கப்படும். வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் தயாரிக்கும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய மூன்றும் முதற்கட்டமாக ஏற்றுமதி உரிமத்தை பெற்றுள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டில் சவுதிஅரேபியா, அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு ரூ.40.00 இலட்சம் செலவில் ஏற்றுமதி வணிகம் நடைபெற்றுள்ளது. இதுபடிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
நபார்டு வங்கி மூலம் 1 சதவிகித வட்டியில் பெறப்படும் கடன் உதவியை கொண்டு இலாபத்தில் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவதற்கு கடந்த ஆண்டு வரை ரூ.54.00 கோடியும், 454 சங்கங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 1,648 கடன் சங்கங்களில் ரூ.456.97 கோடியில் 8,438 பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT