Published : 07 Nov 2022 05:15 AM
Last Updated : 07 Nov 2022 05:15 AM

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

கோப்புப்படம்

ராமேசுவரம்: தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 5-ம் தேதி3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

அவர்களில் சிலர் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர், 2 விசைப்படகுகளில் இருந்த அந்தோணி ராயப்பன், அவரது மகன் இம்ரோன் ராபின்சன் (14), லியோ, ஜாய்சன், எஸ்ரா, முருகன், நம்புமிலன், காளிமுத்து, வினோத், நம்புகுமார், அந்தோணி, அருணாச்சலம், பாண்டி, செந்தூர்பாண்டி, மருது ஆகிய 15 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.

இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் அருகே, மீனவ விசைப்படகு சங்கத் தலைவர் சேசு ராஜா தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக் கோரியும் இன்று (நவ. 7) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், தங்கச்சிமடத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிடையே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சிறுவன் இம்ரோன் ராபின்சனுக்கு சிறுநீரகம் பாதித்துள்ளதாகவும், மனிதாபிமான அடிப்படையில் சிறுவனை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேசு ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுநீரகம் பாதித்த சிறுவனை கடலுக்கு அழைத்துச் சென்றது குறித்து, மீன்வளத் துறையினரும், கடலோரக் காவல் படை போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x