Published : 07 Nov 2022 04:54 AM
Last Updated : 07 Nov 2022 04:54 AM
நாமக்கல்: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
அதிமுக 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, நாமக்கல் அருகேயுள்ள பொம்மைக்குட்டைமேட்டில் நேற்று நடைபெற்றபொதுக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகித்தார். இதில், இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சியைப் பிடித்தது. அதனால், பொதுமக்கள் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களும் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி.
முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் அதிமுக ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்கிறார். ஆனால், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைத்தான், திமுகவினர் தற்போது தொடங்கி வைக்கின்றனர். மேலும்,அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நலத் திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. இதனால், திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வரும் தேர்தலில் தக்க பாடம் கற்பிப்பார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது, சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிமுகவை வீழ்த்த நினைத்து, தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரது வேண்டுகோளை ஏற்று, அவருக்கு மன்னிப்பு வழங்கி, துணை முதல்வர் பதவியும், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் வழங்கினோம். அவர் தற்போது திமுகவின் `பி' டீமாக செயல்படுகிறார்.
மீண்டும் அதிமுகவுடன் இணைவோம் என்று ஓபிஎஸ் பேசி வருகிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் இனி எந்தக் காலத்திலும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம். திமுகவில் கடும் அதிருப்தி நிலவுகிறது. விரைவில் திமுக உடையும்.
இரு மொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. இந்தி மொழிக்கு எதிரான மொழிப் போராட்டம் காங்கிரஸ் ஆட்சியில்தான் ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, திமுக மக்களை ஏமாற்றுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT