Last Updated : 07 Nov, 2022 06:18 AM

 

Published : 07 Nov 2022 06:18 AM
Last Updated : 07 Nov 2022 06:18 AM

கோவை கார் வெடிப்புச் சம்பவம் | பிரத்யேக செயலியை பயன்படுத்தி உரையாடிய முபின்: வெளிநாட்டு நபர்களுடன் பேசினாரா என காவல்துறை விசாரணை

கோவை: கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த மாதம்23-ம் தேதி நடைபெற்ற கார்வெடிப்புச் சம்பவத்தில் காரைஓட்டி வந்த ஜமேஷா முபின்(25)உயிரிழந்தார். இவரது வீட்டில்சோதனை நடத்திய காவல்துறையினர் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ரசாயனங்கள், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு வாசகங்கள் அடங்கிய பொருட்களை பறிமுதல் செய்தனர். உயிரிழந்த முபின் குறித்துகாவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

கோயில்கள், அங்கு நடக்கும் உருவ வழிபாடுகளில் முபின் வெறுப்பு கொண்டிருந்ததும், இதற்காக கூட்டாளிகளுடன் இணைந்து 2 ஆண்டுகளாக தாக்குதல் சம்பவத்துக்கு திட்டமிட்டு வந்ததையும் கண்டறிந்தனர். மேலும், 2019-ல் என்ஐஏ அதிகாரிகள் முபின் வீட்டில் சோதனை நடத்தினர். அதன் பின்னர், அவரை தொடர்ந்து கண்காணிக்க உளவுத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், உளவுத்துறையினரின் கண்காணிப்பையும் மீறி, அடுத்தடுத்து 3 வீடுகளுக்கு முபின் மாறியதும், இதை மத்திய, மாநில உளவுத்துறையினர் கண்காணிக்க தவறியதும் தெரியவந்தது.

கார் வெடிப்பு வழக்கை தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது விசாரணைக் குழுவில் மாநகர காவல்துறையின் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோரும் உள்ளனர். இந்நிலையில், முபின் தனது கூட்டாளிகளுடன் பிரத்யேக செயலியை பயன்படுத்தி பேசி வந்ததை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

ஜமேஷா முபின்

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, ‘‘கார் வெடிப்பு சம்பவத்தின்போது, முபின் வைத்திருந்த ஒரு செல்போன் உடைந்துநொறுங்கியது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஒருசெல்போனும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சில செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முபின் தனது கூட்டாளிகளுடன் ‘ஐ.எம்.ஓ’ எனப்படும் பிரத்யேக செயலியை பயன்படுத்தி பேசிவந்துள்ளார். இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ளவர்களுடனும் இந்த செயலியை பயன்படுத்தி பேசலாம். பொதுவாக செல்போனில் சிம்கார்டுகளை பயன்படுத்தி பேசினால் ஏதாவது ஒரு வகையில் காவல்துறையிடம் சிக்கி விடுவோம் என்பதை உணர்ந்து ‘டேட்டா’ மூலம் பிரத்யேக செயலியை பயன்படுத்தி பேசி வந்திருக்கலாம். இந்த செயலியில் வீடியோ அழைப்பு, வாய்ஸ் கால் எனப்படும் குரல் பதிவு அழைப்பு, சாட் எனப்படும் எழுத்து பரிமாற்றம் மூலம் பேச முடியும்.

இதில் சாட்களை பயன்படுத்தாமல் வீடியோ, வாய்ஸ் கால் அழைப்புகள் மூலமாக இவர்கள் பேசி வந்துள்ளனர். இவற்றை ரெக்கார்டு செய்ய முடியாது. மேலும், பேசியவுடன் அழைப்பு விவரங்களை உடனுக்குடன் அழித்துள்ளனர். இச்செயலி மூலம் யாரிடம் பேசியுள்ளனர், வெளிநாட்டு நபர்களுடன் பேசினார்களா என்பது குறித்து விசாரிக்கிறோம்’’ என்றனர். சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் கூறும்போது, ‘‘வாட்ஸ்அப் அழைப்பு, ஐஎம்ஓ போன்ற செயலிகளில் இரு தரப்பினரின் ரகசியம் காக்கப்படும் என்பதாலும், காவல்துறையினரால் கண்காணிக்க முடியாது என்பதாலும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற செயலிகளின் தலைமையை தொடர்பு கொண்டாலும், இரு தரப்பினரின் தகவல்கள் எளிதாக கிடைப்பதில்லை. சட்ட விரோத செயல்களை தடுக்க இதுபோன்ற செயலிகளின் பயன்பாட்டை கண்காணிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பதே ஒரே தீர்வாகும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x