Published : 01 Jul 2014 12:44 PM
Last Updated : 01 Jul 2014 12:44 PM
பழ.நெடுமாறன் தலைமையில் 60 தமிழ் அமைப்புகள் இணைந்து ‘தமிழர் தேசிய முன்னணி’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து இக் கட்சியின் தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சாவூரில் திங்கள்கிழமை அளித்த பேட்டி: இந்தியா விடுதலை பெற்று 65 ஆண்டுகள் கடந்த பின்னரும் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு, ஈழத்தமிழர் விவகாரம் போன்ற முக்கியமான பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழர்களை ஒன்றிணைத்து உரிமைகளைப் பெறுவதற்காக தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை எனது தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள 60 தமிழ் தேசிய அமைப்புகளைச் சேர்ந்த 400 தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி என்ற அரசியல் கட்சியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கட்சியின் கொடியாக மேலே நீல வண்ணம், கீழே மஞ்சள் வண்ணம் கொண்ட கொடி ஏற்கப்பட்டது. நீலம், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களைக் குறிப்பது. மஞ்சள், தமிழர்களின் வீரம், பண்பாடு, வளமை ஆகியவற்றைக் குறிப்பது.
கட்சியின் தலை வராக என்னைத் தேர்ந்தெடுத் துள்ளனர். மற்ற நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தி மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்சியின் கொள்கைகள்
தமிழினத்தின் விடிவுக்காகப் போராடுவது. தமிழ்நாட்டுத் தொழில், வணிகத் துறையை பன்னாட்டு முதலாளிகள், இந்திய பெருமுதலாளிகளின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப் போராடுதல். மதுவிலக்கை வலியுறுத்தி போராடுதல்.
இந்த அமைப்பைச் சேர்ந்த வர்கள் சாதி சங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது. சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமே கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடும், சலுகைகளும் அளித்தல். தமிழ்நாட்டில் ஆட்சிமொழி, வழிபாட்டு மொழி, நீதிமன்ற மொழியாக தமிழை காலக் கெடுவுக்குள் செயல் படுத்துதல்.
தமிழர்கள் கணிசமாக வாழும் நாடுகளுக்கு தமிழர்களையே தூதுவர்களாக நியமிக்க வேண்டும். இலங்கை, மலேசியா, பர்மா போன்ற நாடுகளிலிருந்து அகதிகளாக திரும்பியுள்ள பல லட்சம் தமிழர்களை அந்தமான் தீவுகளில் குடியேற்றி அவர்களின் வாழ்வுக்கு உதவுதல் உள்ளிட்டவை கட்சியின் கொள்கைகளாகும்.
தேவைப்பட்டால் கட்சி நிர்வாகிகள் கூடி தேர்தலில் நிற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் நெடுமாறன்.
பேட்டியின்போது, இனியன் சம்பத், அய்யனாபுரம் சி.முருகேசன், ஜோசப் கென்னடி, இயக்குநர் கௌதமன், இளவழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT