Last Updated : 01 Nov, 2016 02:23 PM

 

Published : 01 Nov 2016 02:23 PM
Last Updated : 01 Nov 2016 02:23 PM

போடி அருகே அரசுப் பள்ளியில் ஆயிரம் மரங்களை வளர்த்து அசத்திய மாணவர்கள்

அரசுப் பள்ளியில் 1000 மரங்களை நட்டு வளர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன் உதாரணமாக மாணவர்கள் திகழ்ந்து வருகின்றனர்.

அரசுப் பள்ளி என்றாலே சிதிலமடைந்த கட்டிடங்களும், அடிப்படை வசதியில்லாமல், போதிய மரங்கள் இன்றி வெயிலின் தாக்கத்தினால் மாணவர்கள் அவதியடைந்து வருவதாகவே சில மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் போடி அருகே சிலமலை அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் நுழைந்தால் இந்த கருத்து பொய் என்பதை உணர்ந்து கொள்வர். அந்த அளவிற்கு இயற்கை எழில் மிக்க சோலை வனத்திற்குள் நுழைவது போல் பள்ளி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் புங்கை, வேம்பு, ஆலமரம், தேக்கு என 1000 மரங்களை மாணவர்கள் வளர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் மற்ற பள்ளிகளுக்கும் முன்உதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் பள்ளியின் வேளாண்மை ஆசிரியர் பி.மகேந்திரன் கூறுகையில், இது அரசு உயர்நிலைப்பள்ளியாக கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது. 2002-ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டுள்ளதோடு, 900 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி கட்டப்பட்ட மற்றும் தரம் உயர்த்தப்பட்டு காலக்கட்டத்தில் பணியாற்றிய தலைமை ஆசிரி யர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை மரம் வளர்க்க ஊக்கப்படுத்தினர். இதன் காரணமாக பல்வேறு ஜாதி மரங்கள் வனத்துறையினரிடம் இருந்து பெறப்பட்டு பள்ளி விளையாட்டு மைதானம் தவிர மற்ற அனைத்து இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பாசன வசதியில்லாமல் மழையினை நம்பி இப்பகுதியில் மானாவாரி விவசாயம் நடந்து வரும் நிலையில் ஆரம்பத்தில் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது என்பது இயலாத காரியம் போல் இருந்தது. ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மரங்களின் அவசியத்தை கிராமப்புற மாணவ, மாணவியர்கள் நன்கு உணர்ந் திருந்ததால், தண்ணீரை தேடி சென்று அதனை பிடித்து வந்து ஊற்றி மரங்களை காப்பற்றினர்.

தற்போது தூதுவளை, துளசி ஆகிய மூலிகைசெடிகளும் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மரங்கள் நடப் பட்டு வருவதால், கடந்த 36 ஆண்டுகளில் 1000 மரங்களுக்கு மேல் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு உயர் பதவிகளில் முன்னாள் பள்ளி மாணவர்கள் வகித்து வந்தாலும், அவ்வப்போது பள்ளிக்கு வந்து தாங்கள் நட்ட மரங்களை பார்த்து செல்கின்றனர். சிலர் மரத்தின் நிழலில் அமர்ந்து தங்களது பள்ளி வாழ்க்கையை நினைவு கூர்ந்து செல்கின்றனர். இதனை பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு காரணமாக 1000 மரங்களை நட்டு வளர்த்தது சாத்தியமானது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x