Last Updated : 06 Nov, 2022 07:22 PM

2  

Published : 06 Nov 2022 07:22 PM
Last Updated : 06 Nov 2022 07:22 PM

கடலூர் | 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் பேரணி, பொதுக்கூட்டம்: போலீஸ் குவிப்பு

கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தது.

கடலூர்: கடலூரில் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் பேரணி, பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு பாதுகாப்பிற்காக 1000 போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ராமலிங்க அடிகளாரின் 200 விது பிறந்த ஆண்டு, மாகாத்மா காந்தியின் 153 வது பிறந்த ஆண்டு, பாரதம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த விழா ஆகிய முப்பெரும் விழா பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த இருந்தனர். அதன்படி 44 இடங்களில் பேரணி,பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் ஏற்கனவே கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், மற்ற இடங்களில் அனுமதி பெறாமல் இருந்த நிலையில் தற்போது நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த தயாராக இருந்தனர்.

இதற்கிடையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 44 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். ஆனால் கடலூரில் பேரணி, பொதுக்கூட்டம் நடக்கும் என்று நிர்வாகிகள் கூறி வந்தனர். இன்று(நவ.6) காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தனர். இதனால் கடலூர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

கடலூரில் ஆர்எஸ்எஸ் பேரணியையொட்டி கடலூரில் குவிக்கப்பட்டிருந்த போலீஸார்.

நேற்று இரவு(நவ.5) முழுவதும் போலீஸாரால் வாகன சோதனை நடத்தப்பட்டது. அந்த வழியாக சந்தேகப்படும் படி வரும் நபர்களை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இன்று(நவ.6) மாலை 4 மணிக்கு பேரணி திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் உள்ள ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. கடலூர் பாரிவள்ளல் பேரணியை தொடக்கி வைத்தார். பேரணி 4 மாட வீதிகள் வழியாக சென்று சன்னதி தெருவில் பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தில் முடிந்தது. பேரணியில் சென்றவர்கள் வெள்ளை நிற சட்டையும், காக்கி பேண்ட் அணிந்து சென்றனர்.

பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்துக்கு கடலூரை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வராஜ், ஆர்எஸ்எஸ் வட தமிழக மாநில குடும்ப ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கலந்துகொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு பற்றியும், இராமலிங்க அடிகளார், மகாத்மா காந்தி பற்றியும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தைது பற்றியும் பேசினர். பொதுக்கூட்டம் மாலை 5.15க்கு முடிவடைந்தது.

வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சிபுர சரக டிஐஜி சத்தியபிரியா, கடலூர் எஸ்.பி.சக்திகணேசன் ஆகியோர் தலைமையில் 1000த்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சன்னதி தெரு மற்றும் பேரணி சென்ற 4 மாட வீதிகளிலும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x