Published : 06 Nov 2022 06:14 PM
Last Updated : 06 Nov 2022 06:14 PM
தஞ்சாவூர்: தமிழகத்தில் பள்ளிக் கட்டிடங்கள் எங்கெல்லாம் பழுதடைந்து உள்ளதோ, அவற்றையெல்லாம் இடித்துவிடவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், இரண்டு போக்குவரத்து வழித்தடங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். அந்த வழித்தடத்தில் சென்ற பேருந்தில் சிறிது தூரம் அமைச்சர் அன்பில் மகேஸ் அமர்ந்து பயணித்தார். அப்போது அவர், முதல்வரின் அறிவுறுத்தலின்படி வரலாற்றிலேயே முதல்முறையாக திருச்சியையும், தஞ்சையையும் கல்லணை வழியாக இரண்டு மாவட்டத்தையும் இணைத்த பெருமை முதல்வரையே சாரும். இந்த வழித்தடத்தில் தினந்தோறும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது பயனுள்ள வழித்தடமாக இருக்கும் என்றார்.
பின்னர் அவரிடம் மழைக்காலத்தையொட்டி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மழைநீர் வடிவதாக இருந்தாலும் சரி, ஊறிப்போன சுற்றுச்சுவராக இருந்தாலும் சரி எதையெல்லாம் இடிக்க வேண்டுமோ இடித்துவிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற சூழல் இருக்கின்ற இடத்தில் பள்ளி மாணவர்களை அனுமதிக்காதீர்கள் என்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உள்ள ஸ்விட்ச் போர்டு முதற்கொண்டு ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டும் எனவும், அதேபோல் பள்ளிக் கட்டிடங்கள் எங்கெல்லாம் பழுதடைந்து உள்ளதோ, அங்கெல்லாம் இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், தண்ணீர் எந்த பள்ளிகளிலும் தேங்கக்கூடாது எனவும், கிராமப்புறங்களாக இருந்தால் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் மோட்டார் பம்புகளைக் கொண்டு இறைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT