Published : 06 Nov 2016 10:16 AM
Last Updated : 06 Nov 2016 10:16 AM
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங் களில் 2.75 கோடி வழக்குகள் தேங்கி யுள்ளதால், நீதித்துறை திணறி வரு கிறது. நீதி தாமதமாவதால் நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங் களில் தினமும் 2,600 முதல் 2,800 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சமீபத்திய கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் மட்டும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2.30 கோடியாக உயர்ந் துள்ளது. இதில் 80 லட்சம் வழக்குகள் உரிமையியல் சார்ந்தவை. அதிலும் குறிப்பாக 60 லட்சம் வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளவை.
உச்ச நீதிமன்றத்தில் 64,919 வழக்கு கள், சென்னை உள்ளிட்ட 24 உயர் நீதி மன்றங்களில் 44.50 லட்சம் வழக்குகள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 2.75 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இது 3 கோடியைத் தொட்டுவிடும் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதிலும் தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மட்டுமே 80 சதவீத வழக்குகள் தேங்கியுள்ளன.
கடந்த 2012-ம் ஆண்டு தேசிய நீதிமன்ற மேலாண்மைத் திட்ட அறிக்கை யின்படி கடந்த 30 ஆண்டுகளில் நீதிபதிகளின் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளது; வழக்குகளின் எண் ணிக்கை 12 மடங்கு உயர்ந்து விட்டது.
போதிய நீதிபதிகள் இல்லை
அமெரிக்காவில் 10 லட்சம் மக்கள்தொகைக்கு 107 நீதிபதிகளும், கனடாவில் 75 நீதிபதிகளும் உள்ள நிலையில், இந்தியாவில் இந்த விகிதத்துக்கு 13 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். வெளிநாடுகளில் ஒரு நீதிபதி ஆண்டு முழுவதுக்குமே 89 வழக்குகளைத்தான் விசாரிக்கிறார் என்றால், இந்தியாவில் ஒரு நீதிபதி ஒருநாளிலேயே 89 வழக்குகளை விசாரிக்கவேண்டி உள்ளது. இதற்கு வழக்குகளின் தேக்கம் முக்கிய காரணம்.
கடந்த 1987-ல் அப்போதைய மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு 40 ஆயிரம் நீதிபதிகள் தேவை என கணக் கிடப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக் குப் பிறகு, இப்போதும் நீதிபதி களின் எண்ணிக்கை வெறும் 18 ஆயிரம் மட்டுமே. நீதிபதிகள் பற்றாக் குறையால் வழக்குகள் எண்ணிக்கை யும் ஆண்டுதோறும் அதிகரித் துக்கொண்டே போகிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு இந்திய நீதித்துறை தள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பி.வில்சன், ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
வழக்குகளின் தேக்கத்தால், நீதித்துறை மீது பொதுமக்கள் வைத் திருக்கும் நம்பிக்கை கொஞ்சம், கொஞ்சமாக குறைகிறது. இதற்கு காரணம், நம் நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகள் இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012-ல் இருந்தே மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் பணியிடம் காலியாக விடப்பட்டுள்ளது.
2006-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண் ணிக்கையை 75 ஆக உயர்த்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் 2016-ல்தான் இந்த எண் ணிக்கை 54 ஆகியுள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் மத்திய, மாநில அரசுகள் தேவையின்றி தாமதம் செய்கின்றன. நீதிபதிகள் பட்டியலை தயார் செய்யும் நீதிமன்ற கொலிஜீயம் அதற்கு முன்பாகவே மத்திய, மாநில அரசுகள், உளவுப்பிரிவின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஒருவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்து அவர் பொறுப்பேற்பதற்குள் 2 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. நீதிபதிகள் நியமனத்தில் ஒற்றைச்சாளர முறையை அறிமுகப்படுத்தினால் அதிகபட்சம் 6 மாதத்துக்குள் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பிவிடலாம்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு குறைந்தது 100 நீதிபதிகள் தேவை. அதுபோல, மக்கள்தொகை பெருக் கத்துக்கு ஏற்ப நாடு முழுவதும் நீதிபதிகள் எண்ணிக்கையை அதி கரித்தால், வழக்குகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது. நீதியும் தாமதமாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
படித்தவர்களும் வழக்குகளும்..
கல்வியறிவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்கள் மத்தியில் உள்ள அதிக விழிப்புணர்வு காரணமாக வழக்குகள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உதாரணத்துக்கு கேரளாவின் கல்வியறிவு 90 சதவீதமாக உள்ளது. அங்கு ஆண்டுதோறும் 1,000 பேருக்கு 28 வழக்குகள் புதிதாக பதிவாகின்றன. 53 சதவீத கல்வியறிவு கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1,000 பேருக்கு 4 வழக்குகள் மட்டுமே புதிதாக பதிவாகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT