Published : 06 Nov 2022 04:05 PM
Last Updated : 06 Nov 2022 04:05 PM
சென்னை: பல்லாவரம் புத்தேரியில் இருந்து கீழ்கட்டளை ஏரிக்கு தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டு, நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக தற்கால மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார். இந்தப் பகுதிகளில் கடந்தாண்டு மழை வெள்ளத்தின்போது பெருமளவில் பாதிப்புகள் இருந்தன. பல்லாவரம் அருகில் இருக்கின்ற புத்தேரி என்ற ஏரியிலிருந்து தண்ணீர் கீழ்கட்டளை ஏரிக்கு செல்வதற்கான முறையான வடிநீர் கால்வாய் வசதிகள் இல்லாததால், மழைக்காலத்தில் இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தப் பகுதியில், தற்காலிகமாக 10 மீட்டர் அளவிலான வடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வடிநீர் வசதி இரண்டரை கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, கூறியது: "கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்வதற்கு முன் நடுவில் கொஞ்சம் தனியார் நிலம் உள்ளது. அந்த தனியார் நிலத்தை கையகப்படுத்தி, இந்த கால்வாயைக் கட்டி முடித்தால், தண்ணீர் தேங்காது.
இல்லையென்றால், அனைத்து இடங்களிலும் முழங்கால் அளவு தண்ணீர் நிற்கிறது. எனவேதான், நேற்று தலைமைச் செயலாளரும் பார்வையிட்டுச் சென்றுள்ளார். திட்ட அறிக்கை வந்தவுடன் கால்வாய் கட்டப்படும். அதனை பார்வையிட்டோம், அடுத்த ஆண்டிற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்.
தனியார் நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும் ரூ.35 கோடி, கால்வாய் கட்டும் பணிகளுக்கான செலவுகள் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த பணிகளுக்காக ஒரு ஏக்கர் வரையிலான நிலம் எடுக்க வேண்டியிருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது" என்று அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை, எஸ்.ஆர்.ராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT