Published : 06 Nov 2022 03:21 PM
Last Updated : 06 Nov 2022 03:21 PM

பாஜக இருக்கும்போது தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கான அவசியம் என்ன? - திருமாவளவன்

சென்னை கோயம்பேட்டில் மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு வழங்கும் திருமாவளவன்

சென்னை: "பாஜக என்கிற அரசியல் இயக்கம் இருக்கிறபோது, தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கான அவசியம் என்ன வந்தது? ஏன் ஆர்எஸ்எஸ் இங்கே தனியே பேரணி நடத்த வேண்டும்? உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அவர்கள் பின்வாங்கி ஓட்டம் எடுத்துள்ளனர்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனது முன்னுரையுடன் கூடிய மனுஸ்மிருதி நூல் பிரதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழகத்தில் பேரணி நடைபெறும் இடங்களில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தங்களது உறுப்பினர் அட்டைகளை வழங்க வேண்டும். அந்த அமைப்பு பதிவு செய்யப்படாத அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கென்று தனியே ஒரு அலுவலகம், அடையாளம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு தலைமறைவு இயக்கத்தைப் போல, ஒரு பயங்கரவாத பாசிச அமைப்பு ஆர்எஸ்எஸ் அமைப்பு இயங்குகிறது என்பதை நாட்டு மக்களுக்கு உயர் நீதிமன்றமே அம்பலப்படுத்திவிட்டது.

50 இடங்களில் அவர்கள் பேரணி நடத்த விண்ணப்பித்தார்கள். அவர்களால் ஆதாரங்களை காண்பிக்க முடியவில்லை. உறுப்பினர் அட்டைகளை காண்பிக்க இயலவில்லை. அவர்களது முகவரி என்ன? மாவட்ட, ஒன்றிய, முகாம் அல்லது கிளை அளவிலான பொறுப்பாளர்கள் பட்டியலை உயர் நீதிமன்றம் கேட்டது. ஆனால், அவர்களால் தரமுடியவில்லை. இதுதான் எதார்த்தமான உண்மை.

நாங்கள் இந்து சமுதாயத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில், இந்துக்களின் நலன்களை முன்னிறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காகவே இந்த புத்தகத்தை விலையில்லாமல் வழங்குகிறோம். இந்த விழிப்புணர்வை 1927-ல் டிசம்பர் 25-ம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் இந்நூலை எரித்தார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் கோட்பாடு அல்லது கொள்கை அறிக்கை மனுஸ்மிருதி என்று சொன்னால் அது மிகையாகாது. மனுஸ்மிருதியில் கூறியுள்ளவற்றையே ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் தமது அரசியல் கொள்கையாக, கலாச்சார கொள்கையாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீண்டும் இங்கே நிலைநிறுத்த விரும்புவது மனுஸ்மிருதி கட்டமைத்த சமூக அமைப்பே ஆகும். பாஜக என்கிற அரசியல் இயக்கம் இருக்கிறபோது, தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கான அவசியம் என்ன வந்தது? ஏன் ஆர்எஸ்எஸ் இங்கே தனியே பேரணி நடத்த வேண்டும்? உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அவர்கள் பின்வாங்கி ஓட்டம் எடுத்துள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x