Published : 06 Nov 2022 04:55 AM
Last Updated : 06 Nov 2022 04:55 AM

சிதம்பரம் மாணவிக்கு சக மாணவர் தாலி கட்டிய விவகாரம் - அதிகாரிகள் அவசரகதியில் செயல்பட்டுள்ளதாக நீதிபதிகள் கடும் கண்டனம்

சென்னை: சிதம்பரத்தில் பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு சக மாணவர் தாலிகட்டிய விவகாரத்தில், குழந்தைகள் நலக் குழுமம் அந்த மாணவியை அவசரகதியில் பெற்றோரிடம் இருந்து பிரித்து, அரசு விடுதியில் அடைத்தது சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரத்தில் பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு, அவருடன் படிக்கும் சக மாணவர் கடந்த செப். 2 அன்று சிதம்பரம் காந்தி சிலை பேருந்து நிலையத்தில் தாலி கட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக சிதம்பரம் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்கள் அந்த மாணவியை பெற்றோரிடம் இருந்து பிரித்து, அரசினர் விடுதியில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், மாணவியின் தந்தை தனது மகளை மீட்டு, தன்னிடம் ஒப்படைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபிகா முரளி, ‘‘அந்த மாணவியின் பெற்றோர் படிப்பறிவு இல்லாதவர்கள். இதனால் அக்.10-ம் தேதி இரவு, மகளை போலீஸாரும், குழந்தைகள் நலக் குழும உறுப்பினரும் எதற்காக அழைத்துச் செல்கின்றனர் என்பதுகூட அவர்களுக்கு தெரியவில்லை. அதன் பிறகே, மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் தொடர்பாக தனது மகளை அழைத்துச் செல்வது தெரியவந்துள்ளது. அரசு தங்கும் விடுதியில் மைனர் பெண்ணான அந்த மாணவியை அடைத்து வைத்துள்ளனர். அவரை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தும், போலீஸாரும், குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்களும் இதுவரை விடுவிக்கவில்லை. அந்த மாணவி எந்த தவறும் செய்யவில்லை’’ என்று வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், போலீஸார் மற்றும் குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அந்த நள்ளிரவு வேளையில் குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்கள் அவசரகதியில் அந்த மாணவியை பெற்றோரிடம் இருந்து பிரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் அரசினர் தங்கும் விடுதியில் அந்த மாணவியை அடைத்து வைத்திருப்பது சட்ட விரோதம் எனத் தெரிவித்த நீதிபதிகள், உடனடியாக மைனர் பெண்ணான அந்த மாணவியை விடுவித்து, பெற்றோரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தி, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

அதன்படி, அந்த மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டதாக போலீஸாரும், குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்கள் தரப்பிலும் பிற்பகலில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், சமூக ஊடகங்கள் வருகைக்கு முன்பாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களை, அவர்களது குடும்பத்தில் உள்ள மூத்தவர்களே கண்டித்து சரிவர கையாண்டு இருப்பர். ஆனால், தற்போது சமூக ஊடகங்களின் யுகம் என்பதால், இதுபோன்ற இளஞ்சிறார்களின் வரம்புமீறிய சம்பவங்களுக்கு பொதுவெளியில் குற்றவியல் ரீதியாக சாயம் பூசப்பட்டு விடுகிறது என்று கருத்து தெரிவித்தனர்.

அப்போது மத்திய அரசின் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்களுக்கு, அவர்களின் பணி என்ன என்பது குறித்தும், இளஞ்சிறார் சட்டம் பற்றிய புரிதலும் இருப்பதில்லை. பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு பாதுகாப்பும், அவர்கள் மீதான அக்கறையும் தேவைப்படும் இடங்களில் மட்டுமே குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் பொத்தாம் பொதுவாக எல்லா சிறார்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. சிறார் அல்லது சிறுமியரது வீட்டில், அவர்களுக்கு உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ துன்புறுத்தல் இருப்பதாக தெரியவந்தால் மட்டுமே, அவர்களை பாதுகாப்பு கருதி பெற்றோரிடமிருந்து பிரித்து அரசினர் விடுதியில் தங்க வைக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் ஒரு மாணவர் தாலி கட்டிவிட்டார் என்பதற்காக அந்த மாணவியை பெற்றோரிடம் இருந்து பிரித்து, அரசினர் விடுதியில் தங்க வைத்தது சட்டவிரோதம். மேலும், குழந்தைகள் நலக்குழுமத்தின் செயல்பாடுகள் மற்றும் பணி என்ன என்பதை இந்த நீதிமன்றமே வரையறை செய்ய வேண்டுமென கருத்து தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த சம்பவம் குறித்தும், தாலி கட்டிய அந்த மாணவரின் நிலை என்ன என்பது குறித்தும் போலீஸார் நவ.10-ம்தேதி விரிவான அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x