Published : 06 Nov 2022 04:55 AM
Last Updated : 06 Nov 2022 04:55 AM

மாநில சின்னவருடன் மாவட்டத்தின் சின்னவர் - புதிய அடையாளத்துடன் வைரலாகும் வாசகம்

மாநில சின்னவருடன் மாவட்டத்தின் சின்னவர் என்ற தலைப்பில் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படம்.

திருவண்ணாமலை: மாநில சின்னவருடன் மாவட்டத்தின் சின்னவர் என்ற புதிய அடையாளத்துடன் உதயநிதி ஸ்டாலினுடன் எ.வ.வே.கம்பன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தில் அசைக்க முடியாத சக்திகளில், முக்கியத்துவம் பெற்றவராக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திகழ்கிறார். இவர், மற்றவர்களை போன்று ‘வாரிசு’க்கு எம்எல்ஏ, எம்.பி., பதவிகளை பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை. இதற்கு மாற்றாக, கட்சியில் உயர் பதவியை பெற்று கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில், காய்களை நகர்த்தி வருகிறார்.

மகன் எ.வ.வே.கம்பனிடம் முக்கிய பணிகளை வழங்கி, கடந்த 4 ஆண்டுகளாக களப் பணியில் ஈடுபடுத்தி உள்ளார். உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் பணி உள்ளிட்ட பொறுப்புகளை மகன் எ.வ.வே.கம்பனிடம் வழங்கினார். சோதனை ஓட்டத்தில் மகனும் வெற்றி கண்டுள்ளார். ‘அரசியல் குரு’வாக இருந்து மகனை வழி நடத்தி வருவதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து திமுக முக்கிய பிரமுகர்கள் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் தங்களது மகன்களுக்கு வாய்ப்பு கேட்டபோது, எ.வ.வேலுவிடம் உனது மகனுக்கு வாய்ப்பு வேண்டுமா? என நேரிடையாகவே ஸ்டாலின் கேட்டுள்ளார். அப்போது வேண்டாம் என எ.வ.வேலு மறுத்துவிட்டார்.

எம்எல்ஏ, எம்.பி., பதவிகளைவிட, கட்சியின் பதவியே பெருமைமிக்கது என நினைப்பவர் அமைச்சர் எ.வ.வேலு. இதனால்தான், மகன் எ.வ.வே.கம்பனுக்கு கட்சி பதவியை பெற்று தர முயற்சித்து வருகிறார். கட்சியில் மூத்தவர் என்பதால், அமைச்சருக்கு மாநில பதவி கிடைத்ததும், மாவட்ட அளவிலான பதவி கம்பனுக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த இலக்கை அடைய சில காலம் காத்திருக்க வேண்டும் என்பதால், திமுக இளைஞர் அணியில் மாநில அளவில் ‘துணை’ பதவியை எதிர்நோக்கி, மிக, மிக நுட்பமாக காய்கள் நகர்த்தப்படுகிறது. இதன் எதிரொலியாக, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை திருவண்ணாமலை வரவழைத்து, மிக பிரமாண்ட வரவேற்பு மற்றும் கூட்டத்தை நடத்தி காண்பித்துள்ளார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்துக்கான ஏற்பாடுகளை எ.வ.வே.கம்பன் செய்திருந்தார். இதன்மூலம், உதயநிதி ஸ்டாலினிடம் அவருக்கு நற்பெயரும் ஏற்பட்டுள்ளது” என்றனர். இந்நிலையில், ‘மாநில சின்னவருடன், மாவட்டத்தின் சின்னவர்’ என்ற புதிய அடையாள வாசகத்துடன் கூடிய புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலையில் உள்ள கருணாநிதி சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது, அவருடன் எ.வ.வே.கம்பன் இருக்கும் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. திமுகஇளைஞர் அணியில் முக்கிய பதவியை எதிர்நோக்கி காய்களை நகர்த்தி வரும் நிலையில், புகைப்படம் இணைக்கப்பட்டுள் ளது திமுகவினர் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. மாநில அளவில் உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என அவரது ஆதரவாளர்கள் அழைக்கும் நிலையில், மாவட்ட அளவில் எ.வ.வே.கம்பனை சின்னவர் என அவரது ஆதரவாளர்கள் அழைக்க தொடங்கி உள்ளனர்.

திமுக மருத்துவர் அணி மாநில துணை தலைவர் பதவியில் இருந்தாலும், முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழி நடத்தப்பட்ட இளைஞர் அணி பதவி என்பது சிறப்புமிக்கது என திமுகவினர் கூறுகின்றனர். திமுகவில் உள்ள மூத்த முன்னோடிகளின் தடைகளை கடந்து, தனது இலக்கை அமைச்சர் எ.வ.வேலு அடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் தி.மலை மாவட்ட உடன்பிறப்புகள் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x