Published : 05 Nov 2022 05:52 PM
Last Updated : 05 Nov 2022 05:52 PM
புதுச்சேரி: “ஆளுநரை மாற்றும் விஷயங்கள் நடக்காத ஒன்று. திமுக அரசு நீட்டுகிற கோப்புகளில் கையெழுத்திடும் கைப்பாவையாக ஆளுநர் இல்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்திய அரசியல் சட்டப்படி தமிழக ஆளுநருக்கு கருத்து கூற உரிமையும், சுதந்திரமும் உள்ளது.
ஆகவே, திமுக அரசு நீட்டுகிற கோப்புகளில் கையெழுத்திடும் கைப்பாவையாக ஆளுநர் இல்லை. கோப்புகளில் சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்கிறார். அதனாலேயே தமிழக ஆளுநரின் செயல்பாட்டை திமுகவினர் விமரிசிக்கிறார்கள்.
ஆளுநரை மாற்ற வேண்டும் என்கின்றனர். ஆளுநரை மாற்றும் விஷயங்கள் நடக்காத ஒன்று. அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் தங்களது பணியைத்தான் செய்து வருகிறார்கள்.
புதுச்சேரியை பொறுத்தவரையில் ஆளுநர், முதல்வர் இணைந்து எல்லா திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி முதல்வரை எதிர்த்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் போராடிய பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் பங்கேற்றதில் தவறில்லை.
தெலங்கானாவில் ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரம் பேசிய விவகாரத்தில் பாஜகவுக்கு தொடர்பில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குமாறு முதல்வர் கோரியதை மத்திய உள்துறை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று எல்.முருகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT