Published : 05 Nov 2022 12:47 PM
Last Updated : 05 Nov 2022 12:47 PM
சென்னை: சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் மிதக்காமல், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று (நவ.5) மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னையில் கடந்த 4 நாட்களில் மிகப் பெரிய மழை பெய்துள்ளது. 48 மணி நேரத்தில் 45 செ,மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 10 செ.மீ மழை மட்டுமே பெய்தது.
சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிட்டு உரிய நிதி ஒதுக்கி பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்து 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனால், மக்கள் மழை வெள்ளத்தில் மிதக்காமல் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்.
மழைக்கால மருத்துவ முகாம்களை 200 வார்டுகளிலும் தலா ஒரு முகாம் என்று 200 முகாம்களை நடத்திட முதல்வர் உத்தரவிட்டார். முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த காலத்தில் 155 முகாம்களை ஒரேநாளில் நடத்தி 64,000 பேர் பயனடைந்தனர். அந்த நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் எந்த முகாம்களும் இதுபோன்று நடைபெறவில்லை. இதனால், இன்று சென்னையில் 200 வார்டுகளில் 200 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பயனடைய உள்ளனர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும்.
மழைக்கால நோய்களான சேற்றுப் புண், மெட்ராஸ் ஐ, காய்ச்சல், மஞ்சல் காமாலை போன்ற நோய்கள் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதனால், இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 வரை நடைபெறும். சென்னை தவிர பிற மாவட்டங்களான நாமக்கல், கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களிம் இந்த முகாம் நடத்தப்படும்.
ராயபுரம் பகுதியில் உள்ள நேஷனல் தனியார் மருத்துவமனையில் 2 பேர் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இணை இயக்குநர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT