Published : 05 Nov 2022 06:40 AM
Last Updated : 05 Nov 2022 06:40 AM
சென்னை: சென்னையில் பழமையான வீடு இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். சென்னையில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கன மழையும் கொட்டுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், பிற துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக சென்னை சவுகார்பேட்டை ஏகாம்பரேஸ்வரர் அக்ரகாரம் பகுதியில் உள்ள பழமையான வீட்டின் முதல் தளம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள், கட்டிடத்தின்கீழ் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கியவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள், இடி பாடுகளை அகற்றி அதில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர். இதில், கங்குதேவி (60) என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சங்கர் (34), மாதவரத்தை சேர்ந்த சரவணன் (34), வியாசர்பாடியை சேர்ந்த சிவகுமார் (32) ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து யானைகவுனி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT