Published : 05 Nov 2022 06:57 AM
Last Updated : 05 Nov 2022 06:57 AM

கழிவுநீர், மருத்துவக் கழிவு ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி: அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தல்

சென்னை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கழிவுநீர், மருத்துவக் கழிவுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விதிமீறல்களில் ஈடுபடுவதை தடுக்க அவற்றில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை தொடர்பாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு, வாரியத் தலைவர் ஆர்.ஜெயந்தி முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: மஞ்சப் பை விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் செயல்படுத்த வேண்டும். மருத்துவக் கழிவு மேலாண்மை வாகனம் மற்றும் கழிவுநீர் கொண்டு செல்லும் வாகனங்களின் செயல்பாடுகளை ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்க வேண்டும். கழிவுநீரை சட்டவிரோதமாக நீர் நிலைகளில் வெளியேற்றிய வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதை விளம்பரப்படுத்த வேண்டும். 5 லட்சம் பனை விதைகளை கடலோர மாவட்டங்களில் விதைக்க வேண்டும்.

கடலோரப் பகுதிகளில் அலையாற்றிக் காடுகளை வளர்க்க வேண்டும். பசுமை பள்ளிக்கூடத் திட்டம் மற்றும் பசுமைக் கோயில் திட்டத்துக்கான வழிமுறைகளை விரைவில் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார். தேசிய அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு எதிரான மீண்டும் மஞ்சப் பை விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கான ஸ்காச் (SKOCH) விருது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிடைத்துள்ளது. அந்த விருதை அரசுச் செயலர் சுப்ரியா சாஹு, அமைச்சர் மெய்யநாதனிடம் காண்பித்தார். இதையடுத்து, வாரிய அதிகாரிகளை அமைச்சர் பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x