Published : 04 Nov 2022 08:21 PM
Last Updated : 04 Nov 2022 08:21 PM
புதுச்சேரி: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்துள்ளன.
மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளைச் சேர்ந்த மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக துணை அமைப்பாளர் கென்னடி எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேவபொழிலன் மற்றும் அரசியல் கட்சியினர், ஜனநாயக அமைப்பினர், புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை கூட்டாக சந்தித்தனர். அப்போது, யூடிசி தேர்விலும், அரசு வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த கூடாது என வலியுறுத்தி முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.
காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மனுவில் கையெழுத்திட்டிருந்தனர். இதையடுத்து அரசு செயலரை அழைத்து முதல்வர் ரங்கசாமி பேசினார். இதைத்தொடர்ந்து மக்களவை எம்பி வைத்திலிங்கம் அலுவலகத்துக்கு மதச்சார்பற்ற கட்சியினர் வந்தனர்.
அங்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் சலீம் கூறுகையில், "பொதுப்பட்டியலில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு பத்து சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. அந்தந்த மாநிலமே இதனை முடிவு செய்யலாம். புதுச்சேரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான தரவுகள் ஏதும் இல்லை. அதனால் இம்முறையை அமல்படுத்தப்படுத்தக் கூடாது. சமூக நீதியை பாதுகாக்கவேண்டும் என்று குறிப்பிட்டோம். யூடிசி தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்திவைப்பதாக முதல்வர் உறுதி தந்துள்ளார். அரசின் செயல்பாட்டைப் பொறுத்து அடுத்தக்கட்ட செயல்பாட்டை முடிவு எடுப்போம்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT