Published : 04 Nov 2022 07:40 PM
Last Updated : 04 Nov 2022 07:40 PM
புதுச்சேரி: தூண்டில் வளைவு அமைத்துத் தர வேண்டும் என்ற புதுச்சேரி மீனவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி மீனவர்களை எல். முருகன் சந்திக்கும் நிகழ்ச்சி சோலைநகரில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எல். முருகன், ''நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மீனவ மக்கள், மீனவத்துறைக்கு தனி அமைச்சகம் கோரினர். எனினும், அது நடக்கவில்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும் அது கண்டுகொள்ளப்படவில்லை. பாஜக ஆட்சி அமைந்த பிறகு, மீனவர்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி, தனி அமைச்சகத்தை உருவாக்கினார். மீனவர்களின் நலனுக்காக கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.32,500 கோடியை ஒதுக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் புதுச்சேரி மீனவர்களுக்காக ரூ.218 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கு பிறகு மீன்கள் ஏற்றுமதி 32 சதவீதம் அதிகரித்துள்ளது. மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் பேசுகையில், "மீனவ மக்களின் வளர்ச்சியில் கவனம் கொடுக்காத அரசுகள் ஏற்கனவே இருந்தன. புதுச்சேரியில் தற்போது உள்ள கூட்டணி ஆட்சி, மீனவ மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வருகிறது. எனவே, மீனவர் நலனுக்கான நிதி ஒதுக்கீடு சிறப்பாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் பேசுகையில், "மீனவர்களுக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்திப்பவர்கள் காங்கிரஸ்-திமுக கட்சியினர். தற்போது மீனவர் பகுதிக்கு மத்திய அமைச்சரையே அழைத்து வந்துள்ளோம். புதுச்சேரியில் உள்ள தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு, மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும். மீனவ நண்பராக ஒரு காலத்தில் எம்ஜிஆர் இருந்தார். தற்போது இந்தியா முழுக்க மீனவ நண்பராக பிரதமர் மோடி உள்ளார்" என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மீனவர்களும் மீனவ பெண்களும், தூண்டில் வளைவு இல்லாததால் படகுகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதாகவும், இதன் காரணமாக படகுகள் சேதமடைவதோடு மீனவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் எனவே புதுச்சேரி கடற்கரையில் தூண்டில் வளைவு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மீனவர்களின் இந்த கோரிக்கைக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் எல். முருகன், இந்த கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும், தூண்டில் வளைவு இல்லாததால் கடல் அரிப்பு ஏற்படும் பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT