Published : 04 Nov 2022 07:19 PM
Last Updated : 04 Nov 2022 07:19 PM
சென்னை: கொளத்தூரில் 3,000 குடும்பங்களை வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொளத்தூர் 3,000 குடும்பங்களை வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கை அம்மன் கோவில் தெரு (தெற்குத் தெரு), திருவள்ளுவர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர், சர்ச் தெரு, நீலமேகம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றன. இந்த வீடுகளுக்கு வீட்டு வரி, குடிநீர் - கழிவு நீர் வரிகளை முறையாக செலுத்தி வருகின்றனர். ஆதார் மற்றும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தும் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த 1994ம் ஆண்டு தமிழக அரசின் வருவாய்த்துறை அரசாணை (நிலை) எண். 300, நாள் 18.04.1994 மூலம் கொளத்தூரில் புல எண் 53ல் உள்ள 67.30 ஏக்கர் நிலத்தை அரசு ஊழியர்களுக்கு மாடி வீடும் கட்டும் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக, இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவாக மேற்படி நிலம் அமைந்துள்ள ஏரியைக் கைவிட்டு பொதுப்பணித்துறையிலிருந்து 29.6.1993 நாளிட்ட அரசாணை (நிலை) எண் 975 ஆணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2022 மே மாதத்தில் மேற்கண்ட பகுதி நீர்நிலை புறம்போக்கு என்றும், இங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வீட்டை காலி செய்ய வேண்டுமென்றும் தெரிவித்து நீர்வளத்துறை, செங்குன்றம், பாசனப்பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அதிகாரிகளின் இந்த திடீர்நடவடிக்கையால் இப்பகுதியில் வாழும் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இது சம்பந்தமாக தங்களிடமும் மனு அளித்து முறையிட்டுள்ளனர்.
இப்பிரச்சனை சம்பந்தமாக மே 27, 2022 அன்று தங்களை நேரில் சந்தித்து இம்மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளேன். தற்போது மீண்டும் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த 17.10.2022, 18.10.2022 ஆகிய தேதிகளில் அப்பகுதிகளுக்குச் சென்று அங்கு வசிக்கும் மக்களை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நோட்டீஸ் வாங்க மறுத்த மக்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
எனவே, முதலமைச்சர், இப்பிரச்சினையில் தலையிட்டு, தங்களின் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கங்கை அம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் நகர், மகாத்மா காந்தி நகர், சிவசக்தி நகர் விரிவு, கண்ணகி நகர் சர்ச் தெரு, நீலமேகம் தெருவில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் 3,000 குடும்பங்கள் அப்பகுதியிலேயே நிரந்தரமாக குடியிருப்பதற்கு நிலவகை மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டு அம்மக்களை அங்கேயே குடியமர்த்தி பாதுகாக்க வேண்டுமெனவும், அம்மக்களை வெளியேற்றுவதற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT