Published : 04 Nov 2022 05:05 PM
Last Updated : 04 Nov 2022 05:05 PM
சென்னை: “சென்னையில் கடந்த 48 மணிநேரத்தில் 15 முதல் 35 செ.மீ வரையிலான மழை பொழிந்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. மேலும் 90% பாதிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சோழிங்கநல்லூர் தொகுதி, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி, டிஎல்எப், செம்மொழி பூங்கா சாலை, துரைப்பாக்கம் சதுப்பு நில பகுதி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவ.4) நேரில் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் தொடர்ச்சியாக நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். பாதிப்பிற்குள்ளான பகுதிகளில், வெள்ளத் தடுப்பு பணிகளை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. அதனடிப்படையில் சென்னை மாநகராட்சி ரூ.1327.44 கோடி, நகராட்சி நிர்வாக் இயக்குநரகம் ரூ.82.15 கோடி , நீர்வளத் துறை ரூ.434.22 கோடி , நெடுஞ்சாலைதுறை ரூ.229.76 கோடி, கொசஸ்தலையாறு கரையோர பகுதிகளில் ரூ.3220 கோடி , கோவளம் கரையோர பகுதிகளில் ரூ.1714 கோடி, உலக வங்கியிடம் இருந்து ரூ.120 கோடி என்று ஆக மொத்தம் ரூ.7127.57 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் கடந்த 15 மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டாலும், கடந்த 7 மாதங்களாக தான் நடைபெற்று வருகிறது. கொசஸ்தலையாறு, கோவளம் கரையோர வெள்ளத்தடுப்பு பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்ட பணியாகும். மாநகராட்சி எல்லைக்குள் 2 ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடிக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சியும், நகராட்சி நிர்வாக துறையும், தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் ஒருங்கிணைந்து இதுவரை ரூ.2073.57 லட்சம் செலவில் பணிகள் நடந்து முடிவடைந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 220 கி.மீ நீளத்திற்கான மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு இதுவரை 157 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. நகராட்சி நிர்வாகத் துறையும், நீர்வள ஆதாரத்துறையும், நெடுஞ்சாலைத் துறையும் பல்வேறு பணிகள் மேற்கொண்டதன் விளைவாக சென்னையில் கடந்த 48 மணிநேரத்தில் 15 முதல் 35 செ.மீ வரையிலான மழை பொழிந்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. மேலும் 90% பாதிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகர எல்லைக்குள் சீத்தம்மாள் காலனி, தியாகராயா சாலை, பனகல் சாலை, விருகம்பாக்கம் பகுதியில் இராமசாமி சாலை, பி.டி இராஜன் சாலை, இராஜமன்னார் சாலை, டபுள் டேங்க் ரோடு, சைதாப்பேட்டை பகுதியில் திருவள்ளுவர் சாலை, சுப்பிரமணியம் சாலை மற்றும் வேளச்சேரியில் டான்சி நகர், இந்திரா நகர் போன்ற பல்வேறு இடங்களிலும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளதால் மழைநீர் தேங்காத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி என்பது ஏறத்தாழ 7 லட்சம் வாக்காளர்களை கொண்ட மிகப்பெரிய தொகுதி ஆகும். இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு குடிசை பகுதியில் வாழும் எழை எளிய மக்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இந்த தொகுதியில் மழை பாதிப்புகளை முதல்வர் 5 முறைக்கு மேல் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு அருகில் இருக்கின்ற 40-க்கும் மேற்பட்ட சிறிய ஏரிகள், குளங்களில் பெருக்கெடுத்து ஓடுகின்ற உபரிநீர் ஒட்டுமொத்தமாக செம்மஞ்சேரி பகுதிக்குள் நுழைந்து 5 கி.மீ தூரமும் குடியிருப்புகளை பாதித்த பிறகு ஒக்கியம் மதகு வழியாக பக்கிங்கம் கால்வாய் வழியாக கடலுக்குள் செல்கிறது. இந்த குடியிருப்புகளில் வாரக்கணக்கில் மக்கள் மழைநீரினால் தொடர்ந்து பாதிப்படைந்து வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு 10 செ.மீ மழைப் பொழிவிற்கு இங்கு 166 மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மோட்டார் பயன்பாடு இல்லாமல் இயற்கையாக நீர் வடிகின்ற வகையில் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் சாலை, மேடவாக்கம் பகுதிகளில் நேரிடையாக ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு செய்த அனைத்து இடத்திலும் மழைநீர் தேக்கம் என்பது இல்லாமல் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிக்கான திட்ட மதிப்பீடுகளை தயார் செய்து, நீர்வள ஆதாரத்துறையில் சார்பில் ஏறத்தாழ 3.5 கி.மீ நீளத்திற்கும் 12 மீட்டர் அகலத்திற்கும் மிகப்பெரிய கான்கீரிட் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அளவிற்கு அகலமான கான்கீரிட் கால்வாய்கள் வேறு எங்கும் இல்லை. முதலமைச்சரின் லட்சியமான மழை நீர் வெள்ள பாதிப்பு இல்லாத மாநகராமாக சென்னையை மாற்றும் திட்டங்கள் இந்த ஆண்டு 90 % நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு 100% முடிக்கப்பட்டு, வெள்ள பாதிப்பு கண்டறியாத மாநகரமாக சென்னை மாநகரத்தை மாற்றும் பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT