Published : 04 Nov 2022 03:30 PM
Last Updated : 04 Nov 2022 03:30 PM
விழுப்புரம்: “மத்திய அரசின் கல்விக் கொள்கையில் 3,5,8-ம் வகுப்புக்கெல்லாம் பொதுத்தேர்வு என்று கூறுகிறார்கள். இதனால் பள்ளி இடைநிற்றல்தான் அதிகரிக்கும்” என்று தமிழக உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளான ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 கல்லூரிகளில் 2017-2021ம் ஆண்டு பட்டம் முடித்த 1,114 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமை தாங்கினார். உயர் கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன், ஆட்சியர் மோகன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கிய பின் பேசியது: "பட்டங்களை பெறுவதற்கு நீங்கள் எந்தளவிற்கு கஷ்டப்பட்டீர்கள் என்பதைவிட, இதனை பெறவைக்க உங்களது பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டபட்டிருப்பார்கள். படித்தவுடன் வேலைக்கு போக வேண்டும் என்ற நோக்கில் நான் முதல்வன் திட்டத்தை முதல்வர் துவக்கியிருக்கிறார். படிக்கிறபோதே பணித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த துறையாக இருந்தாலும் அதில் சிறந்த முதல்வனாக வரவேண்டும்என்பதே ‘நான் முதல்வன்’ திட்டம்.
காலத்திற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். இந்த உறுப்புக் கல்லூரிகளெல்லாம் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது. தமிழ்வழிக் கல்வி, நுழைவுத் தேர்வு ரத்து போன்ற பல திட்டங்களை கொண்டுவந்ததால்தான் இந்தியாவிலேயே தமிழகம் உயர் கல்வியின் முதன்மை மாநிலமாக உள்ளது. பொறியியல் படிப்பில் சிவில், மெக்கானிக், கணினி அறிவியல்துறைகளில் தமிழ் வழி கல்வியை கொண்டு வந்தது திமுக ஆட்சியல்தான். தமிழ் வழியில் படித்து பலர் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.
பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆங்கிலமும் தேவைதான். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய ஆங்கிலம் தேவை. அதேசமயம், தாய் மொழியான தமிழும் நமக்கு தேவை. இந்த இரு மொழிக் கொள்கை இருந்தால் போதும். தமிழுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருப்பது இந்த திராவிட மாடல் ஆட்சி மட்டும்தான். ஆங்கிலத்தில் உள்ள அனைத்துத் துறை புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்த்து புத்தகம் வெளியிட முதல்வர் தமிழ் வளர்ச்சித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் மாணவர்கள் தமிழில் படித்து பிறகு ஆங்கிலத்தில் படிக்கும்போது, அந்தப் பாடங்கள் மிக எளிதாக அவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், இந்த மொழியைத்தான் படிக்க வேண்டும் என்று திணிப்பதும், கட்டாயப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு அமர்ந்திருக்கும் துணை வேந்தருக்கு இந்தி தெரியாது. மொழி என்பது அவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும். மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கைளை எதிர்ப்பதாக தமிழக முதல்வர் சட்ட சபையில் தெரிவித்தார். தமிழகத்திற்கென்ற ஒரு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைத்துள்ளார். மத்திய அரசின் கல்விக் கொள்கையில் 3,5,8-ம் வகுப்புக்கெல்லாம் பொதுத்தேர்வு என்று கூறுகிறார்கள். இதனால் பள்ளி இடைநிற்றல்தான் அதிகரிக்கும்.
மேலும் இந்தி, சமஸ்கிருதம் படிக்க வேண்டும், இல்லையென்றால் உதவித்தொகை கிடைக்காது என்கிறார்கள். இதற்காகத்தான் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். பொறியியல் படிப்புகளில் வரும் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு 1, 2வது செமஸ்டியர்களில் தமிழ்ப் பாடங்கள் இடம்பெறும். தமிழர் மரபுகள், அறிவியல் தமிழ் என்ற 2 பாடப் புத்தகங்கள் சேர்க்கப்பட்டு தேர்வுகள் நடக்கும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள் என்று கூறுகிறார்கள். எங்களைவிட யாரும் தமிழ் வளர்ச்சிக்கு திட்டங்களை செயல்படுத்தியது கிடையாது. திராவிட மாடல் ஆட்சி இல்லையென்றால் தமிழ் மொழியை ஒழித்துக்கட்டியிருப்பார்கள்” என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த பொன்முடி: மேலும், “பொறியியல் பட்டதாரிகள் படிக்கும்போதே கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொறியியல் பட்டதாரிகள் படிக்கும்போதே கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் படித்த துறையில்தான் வேலைக்குச் செல்ல வேண்டுமென்று இல்லை. இதோ இந்த மேடையில் விழுப்புரம் ஆட்சியர் உட்கார்ந்திருக்கிறார். உங்களைப்போன்று பொறியியல் படிப்பு முடித்துவிட்டு ஐஏஎஸ் ஆகியிருக்கிறார். இதுபோல் நீங்களும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும். ஆனால், ஒருவர் ஐபிஎஸ் படித்துவிட்டு கண்டபடி பேசி வருகிறார். அவரைப் போன்று இருக்கக்கூடாது. வேலைக்குச் செல்வதைக் காட்டிலும், பல பேருக்கு வேலை கொடுப்பவர்களாக உருவாக வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT