Published : 04 Nov 2022 02:17 PM
Last Updated : 04 Nov 2022 02:17 PM

கடலோர மாவட்டங்களில் 5 லட்சம் பனை விதைகள்: ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்

சென்னை: கடலோர மாவட்டங்களில் 5 லட்சம் பனை விதைகளை விதைக்கப்பட வேண்டும் என்றும், பசுமைப் பள்ளி, கோயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை தொடர்பாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை மற்றும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பொதுமக்கள் பிரச்சாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், "மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சாரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் செயல்படுத்த வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படங்கள் தயார் செய்து ஊடகங்களில் வெளியிட வேண்டும். கோயம்பேடு சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்க வேண்டிய முயற்சிகளை விரைந்து முடிக்க வேண்டும். மருத்துவக் கழிவு மேலாண்மை வாகனம் மற்றும் கழிவு நீர் கொண்டு செல்லும் வாகனத்தின் செயல்பாடுகளை புவிசார் நிலை கண்காணிப்பு கருவி (GPS) பொருத்தி கண்காணிக்க வேண்டும். கழிவு நீரை சட்டவிரோதமாக நீர் நிலைகளில் வெளியேற்றிய வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும்.

ஐந்து லட்சம் பனை விதைகள் கடலோர மாவட்டங்களில் விதைக்கப்பட வேண்டும். ஒரு கி.மீ பரப்பளவில் அலாயாற்றிக் காடுகள் கடலோரப் பகுதிகளில் வளர்க்கப்பட வேண்டும். பசுமை பள்ளிக்கூட திட்டம் மற்றும் பசுமை கோயில் திட்டத்திற்கான வழிமுறைகளை விரைவில் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் உபயோகத்தில் இல்லாத மின்சாதனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் மின்னாற்றலை சேமிப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு காணொளி குறும்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட வேண்டும்" என்று அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x