Published : 04 Nov 2022 04:40 AM
Last Updated : 04 Nov 2022 04:40 AM

மதுரைக்கு இடமாறுதல் அரசாணை பெற்றும் மாநகராட்சி பொறியாளர் பொறுப்பேற்காதது ஏன்? - பின்னணி தகவல்

மதுரை: இடமாறுதல் அரசு ஆணை பெற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் தற்போது வரை மதுரை மாநகராட்சி மாநகர பொறியாளராக (பொ) அரசு பொறுப்பேற்கவில்லை. அவரது பணிமாறுதல் ஆணைக்கு முட்டுக்கட்டை போடும் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் செயற்பொறியாளர் அரசு, ஒரு மாதத்துக்கு முன் மதுரை மாநகராட்சி மாநகரப் பொறியாளராக (பொ) நியமிக்கப்பட்டார். மதுரை மாநகராட்சி பொறியாளராக தற்போது பணிபுரியும் லட்சுமணன், திருநெல்வேலி மாநகரப் பொறியாளராக நியமிக்கப்பட்டார்.

மதுரை மாநகராட்சியில் நீண்ட காலம் பணிபுரிந்தவர் அரசு. மதுரத்துக்குப் பிறகு மாநகராட்சி பொறியாளராக (பொ) பணியாற்றியவர். மேயராக இந்திராணி பொறுப்பேற்ற பிறகு, அரசு திடீரென்று கோவை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றத்தின் பின்னணியில் உள்ளூர் அமைச்சர் ஒருவர் இருந்ததாகக் கூறப்பட்டது. அதனால், அவர் மீண்டும் மதுரை மாநகராட்சிக்கு திரும்பி வர முடியாது என மாநகராட்சி அதிகாரிகள் நினைத்தனர்.

இந்நிலையில் அதே உள்ளூர் அமைச்சர் ஆதரவில் அரசு, மீண்டும் மதுரை மாநகராட்சி மாநகரப் பொறியாளராக (பொ) நியமிக்கப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்நிலையில், இடமாறுதல் ஆணை பிறப்பித்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் அரசு தற்போது வரை மதுரை மாநகராட்சி மாநகரப் பொறியாளராகப் பொறுப்பேற்கவில்லை.

அதேபோல் தற்போது லட்சுமணனும் பணியிலிருந்து விடுவிக்கப்படவில்லை. அதனால், திருநெல்வேலி மாநகராட்சி தற்போது மாநகரப் பொறியாளர் இல்லாமல் கீழ் நிலை அதிகாரிகளைக் கொண்டு செயல்படுகிறது. லட்சுமணன் அங்கு வருவார் எனக் கருதி அங்கிருந்த மாநகரப் பொறியாளர் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறியதாவது: மதுரை மாநகராட்சிக்கு அரசு மீண்டும் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அவர் பணிபுரியும் துறை அமைச்சரே வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அதே அமைச்சர் திருநெல்வேலிக்கு இடமாறுதலாகி செல்ல வேண்டிய லட்சுமணனையும் மதுரையில் இருந்து விடுவிக்க வேண்டாம் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது.

அதனால் அரசும், லட்சுமணனும் பணி இடமாறுதல் பெற்றும் அவரவர் பணி யிடங்களுக்கு செல்ல முடியாமல் தற்போது பணிபுரியும் மாநகராட்சிகளிலேயே பணிபுரிகின்றனர் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x