Published : 04 Nov 2022 08:50 AM
Last Updated : 04 Nov 2022 08:50 AM

ஆவின் ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ரூ.12 அதிகரிப்பு: கொள்முதல் விலை உயர்ந்ததால் நடவடிக்கை

சென்னை: ஆவின் ஆரஞ்சு பால் (நிறைகொழுப்பு பால் pasteurized full cream milk) பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நாளை (நவ.5) முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 03.11.2022 நாளிட்ட செய்தி குறிப்பினை தொடர்ந்து, 05.11.2022 முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 32 லிருந்து, ரூபாய் 35 ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 41 லிருந்து, ரூபாய் 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk, நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும்.

தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கே புதுப்பிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60 ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடுசெய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறைகொழுப்பு பால் (அட்டை) தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 24 குறைவு, சில்லறை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 10 குறைவு.

உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தபட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லறை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்தழைப்பு நல்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x