Published : 04 Nov 2022 08:15 AM
Last Updated : 04 Nov 2022 08:15 AM

கடலூரில் தொடர் மழை: காவிரி கடைமடைப் பகுதியில் பயிர்கள் நீரில் மூழ்கின

மழையால் கடலூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்த நிலையில், அதை மீறி விருத்தாசலத்தில் செயல்பட்ட பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

விருத்தாசலம்: வடகிழக்குப் பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் நேற்றும் மிதமான மழை தொடர்ந்து பெய்தது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. சிதம்பரத்தில் அதிகபட்சமாக 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடை மடைப் பகுதியில் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின் போது, பேரிடருக்கு உள்ளாகும் மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி சிதம்பரத்தில் 15.3 செ.மீ, சேத்தியாத்தோப்பில் 12.8 செ.மீ, அண்ணாமலை நகரில் 11.9 செ.மீ, பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் 11.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கடலூரில் பாதிப்பில்லை: கடலூரில் 5.2 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிதமான தொடர் மழை பெய்திருந்த போதிலும் கடலூர் நகரில்,வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை என பேரிடர் மேலாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடலூர், பண்ருட்டி, வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், பகுதிகளில் நேற்று காலை முதல் சாரல் மழையாக பெய்ததால் மக்கள் குடைபிடித்தபடி தங்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டனர். தாழ்வான பகுதியில் இதுவரையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. அதே நேரத்தில் சிதம்பரம் சுற்றுவட்டார டெல்டா பாசன விளைநில பகுதிகளான பிச்சாவரம், தெற்கு திட்டையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

காவிரி கடைமடை பகுதியாக உள்ள தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், உத்தமசோழமங்கலம், கீழச்சாவடி,கிள்ளை, நஞ்சமகத் துவாழ்க்கை, கீழதிருக்கழிப்பாலை, மேலத்திருக்கழிப்பாலை, பிச்சாவரம், கணகரபட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உட்பட்ட வயல்களில் தற்போது சம்பா நடவு பணியும் நடவுக்காக நாற்றங்கள் பணியும் நடைபெற்று வருகிறது.

தொடர் மழையால், காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் கடலில் வடியாமல் எதிர்த்து, பிச்சாவரம் சதுப்புநில காடுகள் வழியாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வயல்களில் புகுந்துள்ளது. இதனால் நடவு மற்றும் நாற்றங்காலில் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கியுள்ளன.

சிதம்பரத்தில் பயிர்கள் அழுகல்: சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மழை தண்ணீரும் கொள்ளிடம் தண்ணீரும் ஒன்றாக வயலில் தேங்கி நிற்பதால் நாற்றங்கால் முழுவதுமாக அழுகி விட்டது. நடவு நட்டு 20 நாட்கள் ஆன நெற் பயிர்கள் மூழ்கி வீணாகியுள்ளது. தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ராதா வாய்க்கால் பாசன சங்க தலைவர் ரெங்கநாயகி கூறுகையில், “சிதம்பரம் பகுதியில் பெய்யும் மழைநீர் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடவு மற்றும் நாற்றங்காலில் தேங்கி நிற்பதால் நாற்றங்கால் முழுவதும் அழுகிவிட்டது. மறு நடவு பணிக்கு நாற்று இல்லை. இது குறித்து அரசு அதிகாரிகளிடம் நேரடியாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும், நவரை பருவத்தின் போது, நல்ல முறையில் மகசூல் பெற அரசு தேவையான விதை நெல், உரம், ஜிப்சம் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மழையால் விடுமுறை: மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆட்சியர் உத்தரவிட்டிருந்த போதிலும், பண்ருட்டி, விருத்தாசலத்தில் உள்ள இரு பள்ளிகள் வழக்கம் போல் பள்ளிகளை தொடர்ந்து இயக்கியது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகங்களிடம் கேட்டபோது, ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று தான் பள்ளி நடைபெறுகிறது என்று தெரிவித்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்பை கண்டறிந்து, உடனுக்குடன் நடவடிக்கை மாநில பேரிடர் மேலாண்மைத் துறை, மழை பொழிவு அதிகமாக பெய்யும் மாவட்டங்கள் குறித்து, கணித்து, முன்னேற்பாடுகளாக அலுவலர்களை நியமித்துள்ளது. கடலூர் மாவட்ட நிர்வாகமும் உரிய ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x