Published : 04 Nov 2022 06:19 AM
Last Updated : 04 Nov 2022 06:19 AM
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பருவமழை மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு 37 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: நவ. 2-ம் தேதி தமிழகத்தில் 38 மாவட்டங்களில் சராசரியாக 18 மிமீ மழை பெய்துள்ளது. நேற்று சென்னையில் 22.35 மிமீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் நேற்று பெய்த கனமழையால் தேனி மாவட்டத்தில் சுவர் இடிந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 16 கால்நடைகள் இறப்பு பதிவாகியுள்ளது. 52 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்புக்கு உடனடியாக ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 37 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 536 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ள நிலையில், 278 இடங்களில் மழை நீரை வெளியேற்ற 340 பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
191 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6 நிவாரண மையங்களில் 283 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை நீர் தேங்கியுள்ளதால் பாதிப்புக்குள்ளான 15 பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 55,500 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த 4 நாட்களுக்கு மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையில் 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன என்றார். அமைச்சர் ஆய்வின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், பேரிடர் மேலாண் இயக்குநர் சி.அ.ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT