Published : 21 Nov 2016 03:02 PM
Last Updated : 21 Nov 2016 03:02 PM

பழைய ரூபாய் நோட்டுகளில் வழங்கப்படும் சம்பளம்: திண்டாடும் திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்கள்

திருப்பூரில் கடந்த இரு வாரங்களாக பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் சம்பளம் வழங்கப்படுவதால், தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகக் கூறுகின்றனர்.

தொழிலாளர்கள் கூறியதாவது:

தேநீர் கடைகள் தொடங்கி மருத்துவமனைகள், மருந்து விற்பனையகம், மளிகைக் கடைகள், அரசுப் பேருந்துகள், துணி, நகை மற்றும் மொத்த வியாபாரக் கடைகள் என பல்வேறு பகுதிகளில், பழைய ரூபாய் நோட்டுகளை வாங்குவதில்லை என பகிரங்கமாக எழுதி ஒட்டியுள்ளனர். இந்நிலையில், ரூ.100, ரூ.50 நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கடந்த 12-ம் தேதி திருப்பூரில் தொழிலாளர்களுக்கு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் வாரச் சம்பளம் வழங்கப்பட்டது. 19-ம் தேதி மீண்டும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளையே வழங்கினர். அப்போது முறையிட்டபோதும், நிறுவனங்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

கடந்த முறை வழங்கப்பட்ட பழைய நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில், மீண்டும் பழைய நோட்டுகளையே வழங்கியதால் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்.

பணத்தை மாற்ற உரிய ஆவணங்கள் இல்லாததால், வடமாநிலத் தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பும் திட்டத்தில் உள்ளனர் என்றனர்.

தொழில்துறையினர் சிலர் கூறும்போது, “நவ.8 தொடங்கி டிச.30-ம் தேதி வரை மொத்தம் 7 சனிக்கிழமைகள் வருகின்றன. தொழிலாளர்களுக்கு பழைய நோட்டுகளை தொழில்துறையினர் வழங்கினால், சுமார் 500 பேர் வேலை பார்க்கும் ஒரு நிறுவனத்தில், தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.1 கோடி அளவுக்கு சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 4000 நிறுவனங்கள் என்றால், எவ்வளவு என்று கணக்கு போட்டுக் கொள்ளலாம்.

சில நிறுவனங்கள், வாரம் ஒரு நாள் வங்கிகளுக்குச் சென்று சில்லறை மாற்ற விடுப்பும் அளிக்கின்றன. வாரச் சம்பளம் மட்டுமின்றி, மாதச் சம்பளம் வாங்குவோர், கடந்த அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை 3 மாதத்துக்கும் பழைய நோட்டுகளை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களுக்கு வழங்கப் படும் சம்பளம் குறித்து, வருமான வரித்துறை அலுவலர்கள் ஆய்வு எதுவும் மேற்கொள்ளவில்லை. இதனால், நிறுவனங்கள் தொழிலாளர்களை வாட்டி வதைக்கின்றன” என்றனர்.

திருப்பூர் தொழிற்சங்க அமைப்புகள் கூறும்போது, “பின்னலாடை நிறுவனங்கள், கடந்த 2 வாரங்களாக தொழிலாளர்களுக்கு சம்பளமாக பழைய ரூபாய் நோட்டுகளை திணிக்கின்றன. குறைந்தபட்சம் ஒரு தொழிலாளி வாரம் ரூ.2 ஆயிரம் தொடங்கி, ரூ.5 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார். அவர்கள் சம்பளப் பணம் முழுவதுமே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக வழங்கப்படு கின்றன. இது, முற்றிலும் தவறான போக்கு” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x