Published : 03 Nov 2022 10:51 PM
Last Updated : 03 Nov 2022 10:51 PM
திண்டுக்கல்: தமிழகத்தில் முதன்முறையாக காவல் நிலையங்களில் புகார்தாரர்களை மென்மையாக அணுகி, அவர்களின் பிரச்னைகளை துரிதமாக தீர்க்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உருவாக்கினார்.
‘கிரேட்’ என்ற இத்திட்டம் மூலம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும், நியமிக்கப்படும் வரவேற்பாளர்கள் மூலம் புகார்தாரர்களின் மனுக்களை பெற்று, உடனுக்குடன் ஆன்லைனில் பதிவிடுவது, உரிய அதிகாரிகளால் பிரச்னைக்கு தீர்வு காணுதல், தேவையின்றி காவல் நிலைய பகுதியில் மக்கள் கூடுவது போன்ற வீண் பிரச்னைகளை தவிர்க்கும் விதமான செயல்பாடுகளை சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது.
இத்திட்டம் கடந்த 10ம்தேதி மதுரை மாநகரில் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுகிறது. 4 மகளிர் காவல் நிலையம் உட்பட 25 காவல் நிலையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. காவல் ஆணையர், இரு துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு மையத்தில் மெகா திரை ஏற்படுத்தி கண்காணிக்கப்படுகிறது. புகார்தாரருக்கு விரைந்து தீர்வு, தேவையின்றி மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்படுகிறது.பொதுமக்களை முறையாக அணுகி பாரபட்சமின்றி காவல்துறையினர் விசாரிக்க உதவியாக உள்ளது. இருப்பினும், பாரபட்சம் காட்டும் காவல் துறையினரும் உயரதிகாரிகளால் கண்டிக்கப்படுகின்றனர். இதனிடையே காவல்துறை, மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம் அடுத்த கட்டமாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறையிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக மதுரை மாநகர காவல்துறையை திண்டுக்கல் காவல்துறையினர் அணுகி, அதன் செயல்பாடு விவரங்களை சேகரித்து சென்றதாக மதுரை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். விரைவில் இத்திட்டம் திண்டுக்கல்லில் மட்டுமின்றி தென்மண்டலத்தில் பிற மாவட்டத்திலும் பரவலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், ‘‘காவல்துறையினர், பொதுமக்களுடன் மூன்றாவது கண்ணாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது. இன்டர்நெட் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மக்கள் நெருக்கம் மிகுந்த மாநகரில் மட்டுமின்றி மாவட்ட பகுதியிலுள்ள காவல் நிலையங்களையும் ஒருங்கிணைக்கலாம். இதன்மூலம் பொதுமக்கள் பயன் அடைவர். காவலர்கள் மீதான வீண்பழி தவிர்க்கப்படும். காவலர்களும் தேவையின்றி காவல் நிலையங்களில் இருக்காமல் பொதுமக்கள் நலன்கருதி வெளியில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். கண்காணிப்பு எனும் பயத்தால் அவரவர் பணியை செவ்வனே செய்வர்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT