Published : 03 Nov 2022 07:04 PM
Last Updated : 03 Nov 2022 07:04 PM
சென்னை: குடியிருப்பு பகுதிகளை சைவம் - அசைவம் என்று தனியாக பிரிக்க வேண்டும் என்று ஜார்ஜ் டவுன் மறு சீரமைப்பு கருத்து கேட்பு கூட்டத்தில் ஒருவர் கோரிக்கை வைத்தார்.
சென்னையில் மிக பழமையான பகுதியாக ஜார்ஜ் டவுன் பகுதி உள்ளது. இந்த சிறிய, பெரிய என்று பல வணிக நிறுவனங்கள் உள்ளது. மேலும் உயர் நீதிமன்றம், பிராட்வே பேருந்து நிலையம், வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் உள்ளன. இந்நிலையில், இந்தப் பகுதியை மறு சீரமைப்பு செய்ய சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று (நவ.3) பிராட்வே பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். இதன் விவரம்:
ஞான சேகரன்: ஜார்ஜ் டபுன் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மேலும், வாகன நிறுத்த வசதிகளும் இல்லை. எனவே, இதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திர குமார் : ஜார்ஜ் டவுன் பகுதியில் விளையாட்டு மைதான வசதி இல்லை. எனவே, இந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மறு சீரமைப்பு செய்யும்போது குடியிருப்பு பகுதிகளை சைவம் - அசைவம் என்று தனியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் ஒரு விருப்பம் உள்ளது.
அகமது அஸ்ரப் : சாலையோர வியாரிகள் மற்றும் சாலையோரம் வசிப்பர்களை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த வேண்டும்.
பார்சல் லாரி உரிமையாளர்கள் சங்கம்: நாங்கள் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். எனவே, எங்களுக்கு வேறு பகுதியில் இடம் அளிக்க வேண்டும். மாதவரம் போன்ற பகுதிகளில் எங்களுக்கு இடம் அளிக்க வேண்டும்.
முஸ்தபா: சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இந்த திட்டம் இருக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு முன்புதான் இப்படி ஒரு கூட்டம் நடைபெறுகிறது என்ற தகவல் எங்களுக்கு தெரியவந்தது.
ஜெயின் எஸ் சுதிர் : வாகன நிறுத்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நிறைய இடங்களில் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT