Published : 03 Nov 2022 03:45 PM
Last Updated : 03 Nov 2022 03:45 PM
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரம்பலூர் மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்த வி செல்வராஜ் உள்ளிட்ட 5 பேர் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்களில், "ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு கடந்த 2019 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பலர் விண்ணப்பித்ததனர்.
ஆனால், தேர்வு வாரியத்தில் அந்த தேர்வு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதுவரை பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள 167 கலை அறிவியல் கல்லூரிகள் 51 பாலிடெக்னிக்குகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் சுமார் 10,000 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 12 ஆண்டுகளாக இந்த பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 1020 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக உயர் கல்வித் துறை சார்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும்" என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.சங்கரன், "உதவி பேராசிரியர் பணியிடங்கள், ஆண்டு கணக்கில் நிரப்பப்படாத காரணத்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "அரசு கலை கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT