Published : 03 Nov 2022 04:30 AM
Last Updated : 03 Nov 2022 04:30 AM
சென்னை: மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்க பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் அண்ணன் இல.கோபாலனின் சதாபிஷேகம் சென்னையில் இன்று காலை நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக நேற்று சென்னைக்கு வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்குச் செனறார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர். மம்தாவுக்கு பொன்னாடை போர்த்திய முதல்வர் ஸ்டாலின், மக்களாட்சி தொடர்பான ஆங்கிலப் புத்தகம் மற்றும் தஞ்சாவூர் ஓவியத்தைப் பரிசளித்தார். அப்போது மம்தா, தான் எடுத்துவந்த இனிப்பு வகைகளை முதல்வருக்கு வழங்கினார்.
ஏறத்தாழ அரை மணி நேரத்துக்குப் பின்னர் வீட்டுக்கு வெளியே வந்த ஸ்டாலின், மம்தா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். முதல்வர் ஸ்டாலின் கூறும்போது, ‘‘மம்தா பானர்ஜி பலமுறை சென்னை வந்துள்ளார். முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலையை அவர் திறந்துவைத்தது பெருமைக்குரியது. மேற்கு வங்கத்துக்கு தனது விருந்தினராக வருமாறு மம்தா அழைப்பு விடுத்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தேர்தல் குறித்தோ, அரசியல் குறித்தோ எதுவும் பேசவில்லை’’ என்றார்.
மம்தா பானர்ஜி கூறும்போது, "முதல்வர் ஸ்டாலின் எனக்கு சகோதரரைப் போன்றவர். இது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு. ஸ்டாலினை சந்திப்பதை என் கடமையாகக் கருதுகிறேன்.
இரு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திக்கும்போது, ஏதாவது விஷயங்கள் பேசியிருப்போம். அரசியல் பேசுவதைவிட, வளர்ச்சி பற்றி பேசுவதே சிறந்தது. வேறு கட்சியின் செயல்பாடுகள் குறித்தோ, மாநிலங்களில் ஆளுநர் தலையீடு குறித்தோ நாங்கள் பேசவில்லை. நாங்கள் பேசியது அரசியலா அல்லது சமூக, கலாச்சார ரீதியிலானதா என்பதை உங்கள் யூகத்துக்கு விட்டுவிடுகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT