Published : 03 Nov 2022 07:12 AM
Last Updated : 03 Nov 2022 07:12 AM

தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா தொடக்கம்: இன்று பெருவுடையாருக்கு பேரபிஷேகம்

தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவை நேற்று தொடங்கி வைத்து பேசுகிறார் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். உடன் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழா குழுத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர். படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா நேற்று தொடங்கியது. தஞ்சாவூரில் ஆண்டுதோறும் மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று, சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு மங்கள இசை, களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் சதய விழா நேற்று தொடங்கியது. விழாக் குழு தலைவர் து.செல்வம் வரவேற்றார்.

விழாவுக்கு தலைமை வகித்து, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியது: நமது நாட்டை சேர, சோழர், பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். ஆனால், ராஜராஜ சோழனுக்குத்தான் சதய விழா நடத்துகிறோம். ஒரு மன்னன், மக்கள் நலனை முதன்மையாக வைத்து செயல்பட்டால், காலத்தினால் மறக்கப்படுவதில்லை என்பதற்கு ராஜராஜ சோழனே சான்று. அவர், காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்களை நமக்கு வழங்கியவர். அதற்கு சான்று பெரிய கோயில் என்றார். இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ் பேசும்போது, "இக்கோயில் திராவிட கலை அமைப்பின் ஒரு சிறப்பு அம்சமாகும். மாணவர்கள், மருத்துவம், பொறியியல் படித்தாலும், நம் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும். வருங்காலத்தில் தொல்லியல் ஆய்வாளர்களின் தேவை அதிகம் என்பதால், மாணவர்கள் வரலாற்று துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்’’ என்றார்.

தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பேசும்போது, "நம்முடைய தமிழ் பண்பாடு, கலாச்சாரங்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கின்றன. அதை நாம் பேணி காக்க வேண்டும். உலகத்தில் கிடைத்துள்ள பல்வேறு நாணயங்களிலே 80 சதவீதம் நாணயங்கள் ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களாக உள்ளன. இந்த சோழப் பேரரசு கடல் கடந்து வாணிபம் செய்துள்ளது’’ என்றார். தொடர்ந்து, திருமுறை திருநடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சூரியநாராயணன், உதவி ஆணையர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இன்று வீதியுலா: இன்று (நவ.3) தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர், ராஜவீதிகளில் திருமுறை திருவீதியுலா நடைபெற உள்ளது. தொடர்ந்து, பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் 38 மங்கலப் பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறும். இரவு ராஜராஜ சோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x