Published : 03 Nov 2022 12:15 AM
Last Updated : 03 Nov 2022 12:15 AM
மதுரை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால், வருங்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவர் என, சமூக நீதி கூட்டமைப்பு நிர்வாகிகள் நாகரத்தினம், விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு வீர வைச பேரவைத் தலைவர் எஸ்.நாகரத்தினம், அனைத்து மறவர் கூட்டமைப்பு தலைவர் விஜயகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் பிசி, எம்பிசி, சீர்மரபினர் அடங்கிய 245 சாதிகளுக்கான அரசு வேலை வாய்ப்பு, கல்விக்கான இட ஒதுக்கீடு பாரபட்சத்தை மீட்டெடுக்க, பல்வேறு போராட்டம் நடத்தினோம். இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்மூலம் சரியான வகையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.
சாதிவாரி கணக்கெடுப்பின்றி இந்தியளவில் 80 கோடி மக்கள் பாதிக்கின்றனர். 5 சதவீத மட்டுமே இருக்கும் குறிப்பிட்ட ஒரு சாதியினர் 50 சதவீத அரசு வேலை வாய்ப்புகளை பெறுகின்றனர். அது எப்படி நடக்கிறது. இந்தியாவில் 1931க்கும் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரம் எடுக்கவில்லை. எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினருக்கான கணக்கெடுப்பு மட்டும் நடத்தப்படுகிறது. 480 சாதிகளில் 250 சாதிகள் எங்களது சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்துள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் வருங்கால தலைமுறையினர் பாதிக்கப்படுவர். எங்களை போன்றவர்கள் மீது கேள்வி எழும். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நாங்கள் தொடர்ந்த வழக்கு நவ., 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் எங்களுக்கு சாதகமான தீரப்பு கிடைக்கும் என நம்புகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பிற்காக தமிழக முதல்வரை சந்திக்க தொடர்ந்து முயற்சிக்கிறோம். அவர் சந்திக்க வாய்ப்பளிக்கவில்லை. ஆனாலும், முயற்சியை தொடருவோம். முடியாத நிலையில் அடுத்த கட்ட முடிவெடுப்போம். சென்னையில் நவ., 28ல் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில், கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" இவ்வாறு கூறினர்.
சமூக நீதி கூட்டமைப்பின் செயல் தலைவர்கள் பழனிசாமி, ராமராஜ், சீர்மரபின் நலச் சங்க துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT