Published : 02 Nov 2022 07:04 PM
Last Updated : 02 Nov 2022 07:04 PM
சென்னை: சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியது: "மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி பலமுறை சென்னை வந்துள்ளார். தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் வந்து திறந்துவைத்தது எங்களையும், தலைவர் கலைஞரையும் பெருமைப்படுத்தியது. திமுகவையும் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருக்கக் கூடிய இல.கணேசன் அவர்களது இல்லத்தில் நடைபெறும் விழாவிற்கு வருகை தந்துள்ள இந்தச் சூழலில், என்னுடைய இல்லத்திற்கு வந்து மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அதேநேரம் நான் மேற்கு வங்கத்திற்கு விருந்தினராக அவசியம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். தேர்தல் குறித்து இல்லை. தேர்தல் குறித்தோ அரசியல் குறித்தோ எதுவும் பேசவில்லை" என்றார்.
பின்னர் மம்தா பானர்ஜி கூறியது: "தமிழக முதல்வர் ஸ்டாலின் என்னுடைய சகோதரர் போன்றவர். நான் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இது திட்டமிட்ட சந்திப்பு நிகழ்வு இல்லை.
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருக்கக் கூடிய இல.கணேசனின் இல்லத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக நான் சென்னை வந்தேன். ஸ்டாலினை சந்திக்காமல் நான் எப்படி சென்னையில் இருந்து செல்வேன். எனவே, அவரை சந்திப்பது எனது கடமையென்று நான் அறிவேன்" என்று அவர் கூறினார்.
அப்போது அவரிடம், இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது ஏதாவது பேசுவோம். மக்கள் நலன் சார்ந்த அரசியல் குறித்து பேசுவோம். மக்களின் முன்னேற்றம் குறித்து உரையாடுவோம். அரசியல் கடந்து மக்களின் மேம்பாடு குறித்த உரையாடல் சிறந்தது என்று நான் கருதுகிறேன்" என்றார்.
மேலும் “இது தனிப்பட்ட, மரியாதை நிமித்தமான, சகோதர - சகோதரி உறவுகளுக்கு இடையேயான சந்திப்பு. இதிலிருந்து நீங்களே, இந்தச் சந்திப்பு அரசியல் சார்ந்ததா, சமூகம் சார்ந்ததா, கலாச்சாரம் சார்ந்ததா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்" என்றார்.
முன்னதாக, இந்தச் சந்திப்பின் போது திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...