Published : 04 Nov 2016 12:58 PM
Last Updated : 04 Nov 2016 12:58 PM
8 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திண்டுக்கல்- குமுளி ரயில் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தேனி மாவட்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், போக்குவரத்து செலவு மற்றும் பயண நேரத்தினை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக திண்டுக்கலில் இருந்து சித்தையன்கோட்டை, வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி, சின்னமனூர் வழியாக கேரள மாநிலம் குமுளி (லோயர்கேம்ப்) வரை 110 கி.மீட்டர் தூரத்திற்கு அகல ரயில்பாதை அமைப்பது அல்லது திண்டுக்கல்லில் இருந்து தேனி வரை வந்து போடி, தேவாரம் வழியாக லோயர்கேம்ப் வரை 120 கி.மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைப்பது என திட்டமிடப்பட்டது. ரயில்வே துறை உயர்அதிகாரிகள் ஆய்வு செய்து கடந்த 2008-ம் ஆண்டு ரூ.860 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த 8 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், இதனை செயல்படுத்த வலியுறுத்தி தேனி மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர். இது குறித்து ‘தி இந்து’விடம் திண்டுக்கல்- குமுளி அகல ரயில்பாதை திட்ட போராட்டக் குழு தலைவர் ஆர்.சங்கரநாராயணன் கூறுகையில், திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்ட பின்னர் ஆரம்பகட்ட பணிகள் கூட இதுநாள் வரை தொடங்கப்படவில்லை, 2010-ம் ஆண்டு தேனி, திண்டுக்கல் இரு மாவட்டத்தினை சேர்ந்த விவசாயிகள், முக்கிய பிரமுகர்களை கொண்டு திண்டுக்கல்- குமுளி அகல ரயில்பாதை திட்ட போராட்ட குழு என்ற பெயரில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதையடுத்து 2012-ம் ஆண்டு இத்திட்டத்திற்கு மறு மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதற்கு பின்னர் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மத்திய, மாநில அமைச்சர்களை தொடர்பு கொண்டும் எந்த பலனும் இல்லை, போடி- மதுரை அகல ரயில்பாதை திட்டமும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தேனி, மாவட்டத்தினை சேர்ந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்னையில் குடும்பத்துடன் தங்கி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரு கின்றனர். இம் மாவட்டத்தில் ரயில் போக்குவரத்து எதுவும் இல்லா ததால் பண்டிகை காலங்களில் அவர்களால் சொந்த ஊர்களுக்கு வரமுடியாமல் சிரமப்படுகிறார்கள்.
மேலும் போடி வழியாக ரயில் சேவை தொடங்கப்பட்டால் பொட்டிபுரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு அதிகாரிகள் எளிதாக வந்து செல்ல முடியும். கொடைக்கானல், கும்பக்கரை, சுருளி அருவி, ஹவேவிஸ் மலை, மேகமலை, தேக்கடி போன்ற சுற்றுலா தலத்திற்கும் சுற்றுலாப் பயணி களின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது-. ரயில்வே துறைக்கும் அதிக வருவாய் கிடைக்கும்.
இதன் காரணமாக இந்த ரயில் திட்டத்தினை செயல்படுத்தக்கோரி ஒரு லட்சம் மக்களிடம் கையெழுத்து வாங்கி வைத்துள்ளோம். இதனை மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களிடம் விரைவில் அளிக்க உள்ளோம். இந்த திட்டத்தினை செயல்படுத்த மீண்டும் கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் உண் ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட தயாராக உள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT