Published : 02 Nov 2022 07:15 PM
Last Updated : 02 Nov 2022 07:15 PM
மதுரை; மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை உடைந்து ஆங்காங்கே குடிநீருடன் கலப்பதால் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் விழும் குடிநீர் கரும் நிறத்தில் சாக்கடை கழிவு நீராக வந்து விழுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மாநகராட்சி முழுவதும பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. மற்றொரு புறம் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மாநகராட்சியில் இதற்கு முன் இருந்த குடிநீர் குழாய்கள் 40 முதல் 50 ஆண்டிற்கு முன்பு போடப்பட்ட பழைய குடிநீர் குழாய்கள். அதுபோல், பழைய பாதாள சாக்கடை கழிவுநீர் அமைப்புகளும் பராமரிப்பு இல்லாமல் பழுடைந்து, அவை அடிக்கடி பொங்கி தெருக்கள், சாலைகளில் கழிவு நீர் ஓடுகின்றன. மழைக் காலத்தில் பாதாள சாக்கடை தொட்டிகளில் பொங்கும் கழிவுநீர், குடிநீர் குழாயில் கலப்பதால் குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்தன.
இந்தப் பிரச்சினை கடந்த 10 ஆண்டிற்கு மேலாகவே உள்ளது. குடிநீர் குழாயில் எந்த இடத்தில் கழிவுநீர் கலக்கிறது என்பதை மாநகராட்சி பணியாளர்களால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியாததால் தற்காலிகமாக தீர்வாக சாக்கடை கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் பாதாள சாக்கடை தொட்டிகளில் நிரம்பும் கழிவுநீரை மட்டும் கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்களை கொண்டு அப்புறப்படுத்துகின்றனர். அதனால், தற்காலிகமாக தீர்வாக குடிநீரில் சாக்கடை கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும். பிறகு சில மாதங்களில் மீண்டும் பாதாள சாக்கடை கழிவுநீர், குடிநீரில் கலப்பது தொடர்கிறது.
மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் தொடர்ந்து குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள், பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலக்காது என்று சமாளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாநகராட்சி 44-வது புது மீனாட்சி நகர் நவமணி தெருவில் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களில் குடிநீருக்கு பதில் கரும் நிறத்தில் சாக்கடை கழிவுநீர் வந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள், அந்தக் கழிவு நீரை பிடித்து அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த கண்ணன் கூறுகையில், ‘‘கடந்த 6 மாதமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. எம்எல்ஏ, மேயர், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் சொல்லவிட்டோம். நாளை சரி பார்க்கிறோம் என்கிறார்கள். ஆனால், தற்போது வரை சரி செய்யவில்லை. மாநகராட்சி ‘வாட்ஸ் அப்’ பில் புகார் செய்தோம். உங்கள் புகார் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பதில் வருகிறது. ஆனால், அதற்கும் நடவடிக்கை இல்லை. எங்கள் பகுதியில் எங்கு பார்த்தாலும் ஒரே சாக்கடை கழிவு நீர்தான் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிகால் வசதிகள் சரியாக அமைக்காததால் மழை பெய்தால் வீடுகளை சுற்றி முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்குகிறது. அந்த நீர் வடிவதற்கு ஒரு வாரத்திற்கு மேலாகிறது’’ என்றார்.
வாழும் மினரல் வாட்டர் கம்பெனிக்காரர்கள்: கண்ணன் மேலும் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் மினரல் வாட்டர் கம்பெனிக்காரர்கள்தான் நல்லா வாழுகிறார்கள். ஒரு குடம் குடிநீர் ரூ.13-க்கு விற்கின்றனர். அதைதான் வாங்கி குடிக்க வேண்டும். சமையலுக்கு பயன்படுத்துகிறோம். மாநகராட்சி 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கினாலும் அதனை எதற்கும் பயன்படுத்த முடியாது. அந்தளவுக்கு குடிநீர் கரும் நிறத்தில் தூர்நாற்றத்துடன் வருகிறது. மேலும், குடிநீரை அடிபம்புகளை கொண்டுதான் அடித்து எடுக்க வேண்டிய உள்ளது. குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், வீட்டு வரி முறையாக கட்டுகிறோம். ஆனால், மக்களுக்கான அடிப்படை தேவையான குடிநீர் சுகாதாரத்தை கூட மாநகராட்சி செய்து கொடுக்க மறுக்கிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT