Published : 02 Nov 2022 05:47 PM
Last Updated : 02 Nov 2022 05:47 PM
சென்னை: "மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடும் கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் தமிழக அரசின் ஜனநாயகமற்ற போக்கு வருத்தம் அளிக்கிறது" புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மின் கட்டண உயர்வை கண்டித்து முறையாக முன் அனுமதி பெற்று போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டிருப்பதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கின்றது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழக பாஜக சார்பாக எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினோம். மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடும் கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் தமிழக அரசின் ஜனநாயகமற்ற போக்கு வருத்தம் அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து கார் மூலம் அக்கட்சியின் நிறுவனர்-தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விருதுநகர் நோக்கி வந்துகொண்டிருந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் டோல்கேட் அருகே வந்தபோது அவரை சுமார் 40 கார்கள் தொடர்ந்து வந்துள்ளன. இதனால், திருமங்கலம் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செல்லும் டாக்டர் கிருஷ்ணசாமியின் வாகனத்தைத் தொடர்ந்து 4 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதியளிக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு புதிய தமிழகம் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவருடன் காரில் வந்த அக்கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT