Published : 02 Nov 2022 03:46 PM
Last Updated : 02 Nov 2022 03:46 PM

“பாஜகவின் ஊதுகுழலாக தமிழக ஆளுநர் செயல்படுகிறார்” - வைகோ குற்றச்சாட்டு

வைகோ | கோப்புப்படம்

சென்னை: "தமிழக அரசால் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களை அனுப்பி வைக்காமல், கிடப்பில் போட்டு வைத்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திடுவதற்காக மதிமுக பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான வைகோ இன்று அண்ணா அறிவாலயம் வந்தார். தீர்மானத்தில் கையெழுத்திட்ட பின்னர் அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தற்போது தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என்.ரவி, அரசியல் சாசனத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பதற்கு அதிகாரம் கிடையாது.

சட்ட மசோதாக்களை அனுப்பாமல், கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜகவின் ஊதுகுழலைப் போல செயல்படுகிறார். எனவே இவர் தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிப்பதற்கு தார்மீக உரிமையற்றவராகி விடுகிறார்.

எனவே இவரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும். இதற்காகத்தான் தமிழகத்தைச் சேர்ந்த 57 எம்.பிக்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு நாங்கள் கோரிக்கை மனு அனுப்புகிறோம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களுக்கு, ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது தொடர்பாகவும், அந்த தீர்மானத்தில் கையெழுத்திடுவதற்காகவும் இன்று சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அறிவாலயத்திற்கு வருகைதரும்படி கடிதம் எழுதியிருந்தார். வரும் நவ.3-ம் தேதிக்குள் எம்.பிக்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x