Published : 02 Nov 2022 01:40 PM
Last Updated : 02 Nov 2022 01:40 PM

காவல் மரணம் | இளைஞர் விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

உயிரிழந்த விக்னேஷ் | கோப்புப்படம்

சென்னை: சென்னையில் இளைஞர் விக்னேஷ், போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்த விக்னேஷ் என்ற இளைஞரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலீஸார் விசாரணையில் அவர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், பவுன்ராஜ் , காவலர்கள் முனாப், ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் என்பவர், மனுதாரர்கள் வீட்டுக்கு வந்து ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து வழக்கை முடிக்க முயற்சித்தார். எனவே விசாரணை நியாயமாக நடக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை" என்று வாதிடப்பட்டது.

அப்போது சிபிசிஐடி தரப்பில், "விசாரணை முறையாக, பாரபட்சமற்ற முறையில் நடைபெற்று வருகிறது. 84 சாட்சிகளிடம் விசாரித்து 15 கண்காணிப்பு கேமரா பதிவுகளின் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கூடாது" என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "வழக்கின் புலன் விசாரணை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், சம்பவம் தொடர்பாக 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேரில் பார்த்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து ரத்தக்கறைப் படிந்த இரும்பு கம்பி மற்றும் லத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே, சிபிசிஐடி பாரபட்சமான முறையில் விசாரணை நடத்துவதாகக் கூற எந்த ஆதாரங்களும் இல்லை. மேலும், விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது" எனக் கூறி, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x