Published : 02 Nov 2022 01:16 PM
Last Updated : 02 Nov 2022 01:16 PM
சென்னை: "மழை பாதிப்புகள் தொடர்பாக தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 138 அழைப்புகளில், 68 அழைப்புகளுக்கான நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 70 அழைப்புகளுக்கான பணிகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது" என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக தமிழகத்தில் 5093 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. எந்தெந்தப் பகுதிகளில் மக்களை தங்க வைக்க வேண்டும் என்பதையெல்லாம் அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே முடிவு செய்து வைத்துள்ளனர்.
தற்போது வரை எந்த முகாம்களிலும் ஆட்கள் தங்கவைக்கப்படவில்லை. சென்னையில் மட்டும் 4 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு தேவைப்படுவோருக்கு உணவு வழங்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழையின் காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையின் வடசென்னைப் பகுதி தாழ்வான பகுதி. எல்லா மழைக் காலங்களிலும் தண்ணீர் நிற்கக்கூடிய பகுதி. அந்த பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருமே களத்தில் உள்ளனர். நேற்று எந்தப் பகுதியிலுமே மின்சார தடை இல்லை. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், இந்துசமய அறநிலையத்துறை, மருத்துவத்துறை அமைச்சர்கள் அந்தந்த பகுதிகளுக்குச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பணிகள் துரிதமாக நடந்து கொண்டுள்ளது. முதல்வரின் நேரடிப் பார்வையில் நாங்கள் அனைவரும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மழை பாதிப்புகள் தொடர்பாக தமிழகம் முழுவதிலும் இருந்து 138 அழைப்புகள் வந்துள்ளன. 68 அழைப்புகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 70 அழைப்புகளுக்கான பணிகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 38 அழைப்புகள் வந்தன. 25 அழைப்புகளுக்கான பதிலளிக்கப்பட்டு, அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெறுமனே அழைப்புகளுக்கு பதிலளிக்காமல், பணிகள் முடிந்த பின்னரும் சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு, நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறியப்படுகிறது.
மேலும் அனைத்து மாவட்ட நிர்வாகத்துடனும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மிகப்பெரிய பாதிப்பு தற்போது வரை எந்த மாவட்டத்திலும் இல்லை. சென்னையில் மட்டும் சில இடங்களில் தண்ணீர் தேங்கும் பிரச்சினை உள்ளது. குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகள் எல்லாம் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT