Published : 02 Nov 2022 12:39 PM
Last Updated : 02 Nov 2022 12:39 PM
சென்னை: "பரந்தூர் விமான நிலையத்தின் வருகையால் கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பிற விமான நிலையங்களும் வளர்ச்சி அடையும்" என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், "தற்போதுள்ள விமான நிலையத்துக்கு தேவையான வசதிகளை நாம் செய்ய வேண்டும். இங்கு தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே அதனை தரம் உயர்த்தலாம். ஆனால், இதையே முழுமையாக கொண்டுவரமுடியாது என்ற காரணத்தால்தான், சென்னைக்கு வெளியே செல்ல வேண்டியுள்ளது.
சென்னையைவிட்டு வெளியே சென்றால், வெளியே இருக்கக்கூடிய இரண்டு முக்கியமான மாவட்டங்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர். இது இரண்டுமே ஏரி மாவட்டங்கள். எல்லாமே விவசாய நிலங்கள்தான். இந்த விளை நிலங்களைத்தான், பார்க்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.
இந்தநிலையில்தான், சென்னையைச்சுற்றி ஒரு 11 இடங்களில் ஆய்வு செய்தோம். ஏதோ திடீரென்று ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அந்த இடத்தைத்தான் எடுக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை. 11 இடங்களை ஆய்வு செய்து , பிறகு 4 இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்களை பார்த்தபோது, ஒருபக்கம் கல்பாக்கம் அனல்மின் நிலையம் உள்ளது. இன்னொருபக்கம் தாம்பரம் விமானப் படைத்தளம் உள்ளது. அந்தப்பக்கம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வடக்கே சென்றால் பழவேற்காடு ஏரி மற்றும் அங்கும் ஒரு பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சூழலியலை நாம் தொந்தரவு செய்ய முடியாது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், குறைவான சவால்கள் உள்ள பரந்தூரை தேர்வு செய்தோம்.
அங்கும் சவால்கள் உள்ளன, நீர்நிலைகள் உள்ளன. இருந்தாலும், தமிழக முதல்வர் கூறுவதுபோல, ஒருபுறம் பொருளாதார வளர்ச்சி தேவை, அதேநேரம் அங்கு வசிக்கும் மக்களையும் விட்டுவிட முடியாது. எனவே அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், சிறந்த எதிர்காலத்தை அளிக்கின்ற வகையில்தான் அமையவுள்ளது. எனவே அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்களுடனும் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம்.
பரந்தூர் விமான நிலையம் மட்டும் வரப்போவதில்லை. கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன. தமிழக அரசு சார்பில் இதற்காக 80 முதல் 85 சதவீதம் வரை நிலம் கையகப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்தின் வருகையால் தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களும் வளர்ச்சி அடையும்" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT