Published : 02 Nov 2022 06:28 AM
Last Updated : 02 Nov 2022 06:28 AM
சென்னை: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உருவாக்கப்படும் கிணறுகளுக்கு அரசு செலவில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் 40 சதவீதம் மானியம் பெறும் திட்டத்தில் விவசாயிகள் இணையுமாறும் வேண்டுகோள் விடுத் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகளையும் ஒருங்கே செயல்படுத்தும் வகையில், கடந்த நிதி ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இதன்கீழ், கிராம பஞ்சாயத்துகளில் 10-15 ஏக்கர் தொகுப்பாக உள்ள தரிசு நிலங்களை கண்டறிந்து, இத்தொகுப்பில் உள்ளவிவசாயிகளை குழுவாக ஒருங்கிணைத்து பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை 980 தரிசு நிலத் தொகுப்புகள் அமைக்கப்பட்டு, 705 தொகுப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தரிசு நிலத் தொகுப்பில் சாகுபடி மேற்கொள்ள, தரிசு நிலத் தொகுப்பிலோ அல்லது அருகில் உள்ள புறம்போக்கு நிலத்திலோ நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு, ஆழ்துளை அல்லது குழாய் கிணறு அமைக்கப்படுகிறது. இதுவரை, 980 தரிசு நிலத் தொகுப்புகளில், 453 இடங்களில் ஆழ்துளை, குழாய் கிணறுகள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. ஊரக வளர்ச்சி துறை மூலம் திறந்தவெளி கிணறுகள் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த கிணறுகளில் தத்கால் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரால் 2 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும். இந்த மின் இணைப்புகளுக்கு ஆகும் மொத்த செலவு, மின்நுகர்வு கட்டணத்தை அரசே ஏற்கிறது.இந்த நிதி ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த, 3,204 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இதில் விவசாயிகள் பயன்பெற, உழவன் செயலி அல்லது www.tnagrisnet.tn.gov.in அல்லது www.tnhorticulture.tn.gov.in அல்லது www.mis.aed.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பெயரை பதிவு செய்யலாம்.
சாகுபடிக்கு மானியம்
தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம், 2022-23-ல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.170.79 கோடியில்செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் ரூ.50 கோடியில் 25,680 ஹெக்டேர் அளவுக்கு தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பைஅதிகரிக்க முதல் கட்ட நிதி விடுவிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் காய்கறி, பழம், மலர், சுவைதாளித பயிர் போன்ற தோட்டக்கலை பயிர்களில் தரமான நடவுப் பொருட்கள், இடுபொருட்களை பெற்று, சாகுபடி பரப்பை அதிகரிக்க ஆகும் மொத்த செலவில், அரசு 40 சதவீதம் மானியம் அளிக்கிறது.
காய்கறி பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க செலவாகும் ரூ.50 ஆயிரத்தில், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள குழித்தட்டு நாற்றுகள், இடுபொருட்கள் மானியமாக வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர்வரை மானியம் வழங்கப்படும். பழப்பயிர்களை பொருத்தவரை, அதிகபட்சமாக ஒரு விவசாயி 4 ஹெக்டேர் வரையும், மலர்கள் சாகுபடியில் 2 ஹெக்டேர் வரையும் மானியம் பெறலாம்.
சுவைதாளிதப் பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள நாற்று, இடுபொருட்கள், கிழங்கு வகை சுவைதாளிதப் பயிர்களுக்கு ரூ.12 ஆயிரம் பின்னேற்பு மானியம், பல்லாண்டு பயிர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நடவுப் பொருட்கள், இடுபொருட்கள் மானியமாக வழங்கப்படும். கோக்கோ, முந்திரி விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியத்தில் நடவுப் பொருட்கள், இடுபொருட்கள் விநியோகிக்கப்படும். தேசிய தோட்டக்கலை திட்டத்தில் மானியம் பெற விரும்புவோர் தங்கள் பெயரை https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/login.php என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT