Published : 02 Nov 2022 07:21 AM
Last Updated : 02 Nov 2022 07:21 AM

திருவள்ளூர் | கொட்டித் தீர்க்கும் மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வாயலூர் பாலாற்று தடுப்பணையில் இருந்து வெளியேறிய உபரிநீர்.

திருவள்ளூர்/கல்பாக்கம்/காஞ்சி: திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் மழையால், சென்னைக்குடி நீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதைபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர்தரும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 967 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கனஅடி, கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 70 கனஅடி, சோழவரம் ஏரிக்கு 66 கனஅடி, பூண்டி ஏரிக்கு 50 கனஅடி மழை நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், 11, 757 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டபுழல் உள்ளிட்ட இந்த 5 ஏரிகளில் 6,702 மில்லியன் கனஅடி நீர் இருப்புள்ளது.

3 ஏரிகள் நிரம்பின: செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கனமழை பெய்து வருவதால் ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் திருநீர்மலை, செம்பாக்கம், நன்மங்கலம் பகுதிகளில் உள்ள ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும், 8 ஏரிககள் 76 சதவீதமும், 33 ஏரிகள் 50-ல் இருந்து 75 சதவீதமும், 146 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும் 338 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. மேலும், கனமழை தொடர்ந்தால் இரவுக்குள் ஏரிகள் வேகமாக நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்றில் அமைந்துள்ள தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறி கடலில் கலந்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரியான தாமல் ஏரி முழு கொள்ளவை எட்டியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x