Published : 13 Nov 2016 12:01 PM
Last Updated : 13 Nov 2016 12:01 PM

அங்காடியில் பூக்கள் வீணாகிவிட்டன உணவு, மருந்து வாங்க பணம் இல்லை: ஏடிஎம் மையங்கள் செயல்படாததால் கோவை மக்கள் புலம்பல்

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் 2-வது நாளாக நேற்றும் செயல்படாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தியன் வங்கி உள்ளிட்ட ஓரிரு வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள் மட்டுமே செயல்பட்டன. அங்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து, ரூ.2 ஆயிரம் எடுத்துச் சென்றனர்.

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம், பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் புதிய நோட்டுகளைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்ததால், அனைத்து வங்கிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று காலை முதலே திரண்டனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் வங்கிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். எனினும், 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பின்னரே, வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டதாக பலரும் தெரிவித்தனர்.

கோவை சிவானந்தா காலனியில் உள்ள இந்தியன் வங்கி முன் ஏராளமானோர் நேற்று காலை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்கிருந்த ரத்தினபுரி குப்பாத்தா (70) கூறும்போது, “உணவுப்பொருள் வாங்கக்கூட கையில் காசில்லை. ரூ.500 நோட்டு மட்டுமே என்னிடம் உள்ளது. அந்த நோட்டைப் பெற்றுக்கொண்டு பொருட்கள் வழங்க யாருமே முன்வரவில்லை. இதனால் வங்கியில் கொடுத்து, ரூ.100 நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று வந்தேன். என்னால் நீண்ட நேரம் நிற்கமுடியவில்லை” என்றார். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கைக்குழந்தைகளுடன் வரிசையில் காத்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கி பிரதானக் கிளை முன் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, வங்கிக்குள் சென்று பணத்தை டெபாசிட் செய்தனர். பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை பலர் பெற்றுக்கொண்டனர்.

இதற்குரிய படிவங்களை அங்கிருந்த போலீஸார் வங்கி அலுவலர்களிடம் பெற்று, வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்தனர்.

லிங்கப்ப செட்டித் தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவர் கூறும்போது, “மருந்து வாங்கக்கூட என்னிடம் பணமில்லை. மருந்து கட்டாயம் சாப்பிட்டாக வேண்டும். அதனால், பழைய நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய நோட்டுகளைப் பெற வந்தேன். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருக்கிறேன்” என்றார்.

கடைக்காரர்கள் பாதிப்பு

கோவை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மளிகைக் கடைகள், நுகர்பொருள் விற்பனைக் கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள், பூ, காய்கறி, கனி கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளிலுமே, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைப் பெறாததால், பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். இதனால், விற்பனையும் மிகக் குறைவாகவே இருந்தது.

இதுகுறித்து கோவை பூ மார்க்கெட் பகுதி கடைக்காரர்கள் கூறும்போது, “வழக்கமான விற்பனையில் பாதிகூட விற்பனையாகவில்லை. கடந்த 3 நாட்களாகவே பூக்கள் விற்காமல், வாடி, வதங்கி, வீணாகிவிட்டன. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். மலர்களை சேமித்துவைத்து, பின்னர் விற்பனை செய்ய முடியாது என்பதால், வீணாகும் பூக்களை குப்பைத்தொட்டியில் கொட்டுகிறோம். அன்றாட செலவுகளுக்குக்கூட பணமின்றித் தவிக்கிறோம்” என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x