Published : 02 Nov 2022 02:41 AM
Last Updated : 02 Nov 2022 02:41 AM

அதிமுக, சசிகலா அணியுடன் தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளேன் - டெல்லி கவனர்னருக்கு எழுதிய கடிதத்தில் சுகேஷ் சந்திரசேகர்

டெல்லி: சசிகலா அணியுடன் தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளேன் என்று இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்து வந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன்னுடன் சிறையில் இருந்த தொழிலதிபருக்கு ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

மோசடி செய்த பணத்தில் இந்தி நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி உள்ளிட்டோருக்கு விலை உயர்ந்த பொருட்களை சுகேஷ் பரிசாகக் கொடுத்ததாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கின் மூலமாக தமிழ்நாட்டுக்கு தெரியவந்த சுகேஷ் சந்திரசேகர், பின்னர் அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதினார் சுகேஷ் சந்திரசேகர். சிறையில் இருந்து தனது வழக்கறிஞர் மூலமாக அவர் எழுதிய கடிதத்தில், சிறையில் தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 10 கோடி ரூபாய் வரை கொடுத்ததாகவும், ஆம் ஆத்மி கட்சியில் பதவிபெற 50 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதே கடிதத்தில்தான் தான் தமிழ்நாட்டு அரசியலில் உள்ளதாக சுகேஷ் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடிதத்தின் தொடக்கத்தில், "ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சில பொருளாதாரக் குற்றங்களுக்காக நான் 2017ஆம் ஆண்டு முதல் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். நான் அதிமுக, சசிகலா கோஷ்டியுடன் தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளேன். அதுமட்டுமில்லாமல், கட்டுமான வணிகம், ஊடகம், சுரங்கம் போன்ற தொழில் செய்து வருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, "டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை தனக்கு 2015 ஆம் ஆண்டு முதல் தெரியும். ஆம் ஆத்மி கட்சியில் தென்னக பிரிவில் முக்கிய பதவி பெற்றுத்தருவதாகவும் ராஜ்ய சபா சீட் பெற்றுத்தருவதாகவும் கூறி, கட்சிக்கு ரூ.50 கோடி வரை வாங்கிக் கொடுத்தார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக 2017ல் நான் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது சிறைத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் என்னைப் பல முறை சிறையில் சந்தித்து, ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை கொடுத்ததை விசாரணை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தினாயா எனக் கேட்டார்.

இதன்பின் 2019ல் என்னை சந்தித்து சிறையில் நான் பாதுகாப்பாக சிறையில் இருக்க ஒவ்வொரு மாதமும் ரூ.2 கோடி கொடுக்க வேண்டும் என்று மிரட்டி பணம் பறித்தார். இந்தப் பணத்தை பெறுவதற்காக சிறையில் என்னை கடுமையாக துன்புறுத்தி சித்ரவதை செய்தார்" என்று புகார்களை அடுக்கியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x