Published : 01 Nov 2022 07:57 PM Last Updated : 01 Nov 2022 07:57 PM
வடகிழக்கு பருவமழையின் முதல் கனமழையும் சென்னை மாநகராட்சி நடவடிக்கைகளும் - ஒரு விரைவுப் பார்வை
சென்னையில் திங்கள்கிழமை இரவு தொடங்கி விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கனமழைக்கு திங்கள்கிழமை 2 பேர் பலியாகினர். புளியந்தோப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவரும், வியாசர்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார். சென்னையின் பெய்து வரும் கனமழை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்...
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து நேற்று (அக். 31) முதல் இன்று (நவ.1) மாலை சராசரியாக சென்னையில் மட்டும் 13.37 செ.மீ. மழை பெய்துள்ளது. இதில் திரு.வி.க.நகர் பகுதியில் 23.56 செ.மீ, திருவொற்றியூரில் 21.02 செ.மீ, கத்திவாக்கத்தில் 20.85 செ.மீ. மழை பெய்து உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 6 மற்றும் 7ம் தேதி அதிகபட்சமாக 12.52 செ.மீ., மழை பெய்தது. அதை விட சற்று அதிகமாக இந்த ஆண்டு மழை பெய்துள்ளது.
கே.கே. நகர், அசோக் நகர் 6வது அவென்யூ, ஜி.பி. சாலை, புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை, டிமெல்லோஸ் சாலை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, பட்டாளம், சூளைமேடு, உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
சென்னையில் 17 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. இதில் 15 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. 2 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதிக அளவு தண்ணீர் தேங்கிய 10-க்கு மேற்பட்ட இடங்களில் மோட்டார் பம்புகளை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்து. இதன் காரணமாக அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் அதிகளவில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் இந்த ஆண்டு தற்போது வரை பெரிய அளவில் மழைநீர் தேங்கவில்லை. இதற்கு, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் வாயிலாக, 277.04 கோடி ரூபாய் மதிப்பில் 60.83 கி.மீ., நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளது.
மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் வீட்டிற்கு செல்லாமல் இரவு முழுவதும் தொடர்ந்து பணியாற்றினர். பல்வேறு இடங்களில் பணியாளர்களுடன், அந்தந்த வார்டு கவுன்சிலர்களும் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவோர் 1913 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டால், வீடுகளுக்கு வந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
WRITE A COMMENT